Take a fresh look at your lifestyle.

அரசாங்கம் காணிகளை வழங்குகிறதா?பறிக்கிறதா? :சந்தேகம் வெளியிட்ட மாகாணசபை உறுப்பினர்கள்!

ஸ்ரீலங்கா,நல்லாட்சி அரசாங்கம் ஒரு கையால் காணிகளை வழங்கிவிட்டு மறுகையால் காணிகளை பறித்துக் கொண்டிருக்கும் நாசகார வேலையை செய்து கொண்டிருக்கின்றது என வடமாகாணசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வடமாகாணசபையின் 123ஆவது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இது தொடர்பில் கவனயீர்ப்பை கொண்டுவந்த மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவிக்கையில்

1990ஆம் ஆண்டு தீவகம் கடற்படையினால் கைப்பற்றப்பட்டதால் தீவக மக்கள் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடியேறினார்கள்.

இந்நிலையில், மக்களுடைய காணிகளை கடற்படையினர் அபகரித்துக் கொண்டு அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர்.

இவ்வாறு மண்டைதீவில் கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட 18 ஏக்கர் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு கடற்படையினர் முயற்சித்து வருகின்றனர். இதனை காணி உரிமையாளர்களான மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நானும் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் மண்டைதீவுக்கு சென்று நிலைமைகளை அவதானித்திருந்தோம். அங்கே மக்களுடைய துறைமுகம் மற்றும் நல்ல குடி நீர் கிணறுகள் உள்ள தோட்ட காணிகளையும், குடியிருப்பு காணிகளையும் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் அபகரித்திருக்கின்றனர்.

இந்த காணிகள் மக்களிடம் மீள வழங்கப்பட வேண்டும், நல்லாட்சி அரசாங்கம் வலிகாமம் வடக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்குவதாக காட்டிக் கொண்டு மறுபக்கத்தால் மக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டிருக்கின்றது.

இது நல்லாட்சி அரசாங்கத்தின் நாசகார வேலையாகும். இதனை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து குறித்த கவனயீர்ப்பு தொடர்பில் வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்,

ஒரு பக்கத்தால் மக்களுடைய காணிகளை விடுவிப்பதாக காட்டிக் கொண்டு மறுபக்கத்தால் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகிறது. அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் வந்திருந்தபோது இந்த விடயத்தை கேட்டிருந்தேன். அப்போது இந்த விடயம் பேசி விட்டோம் என பிரதமர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார்.

மேலே பேசி விட்டோம் என்றால் என்ன பேசினீர்கள்? என்பதை கூறியிருக்கவேண்டும், இந்த விடயத்தை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கவேண்டும். அந்த கூட்டத்தில் முதலமைச்சர் கட்டாயமாக கலந்து கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மண்டைதீவில் கடற்படையினர் ஆக்கிரமித்திருக்கும் காணிகளை மக்களிடம் மீள வழங்குவது தொடர்பாக கடற்படை தளபதிக்கு கடிதங்கள் எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.