Take a fresh look at your lifestyle.

இது கொஞ்சம் வில்லங்கமான பக்கம், ஊருக்குத்தான் உபதேசமா?

 

புது தும்புத்தடி கூட்டும் என்பார்கள். கரவெட்டி பிரதேசசபையில் அப்படி கூட்டியிருக்கிறது. கரவெட்டி பிரதேசசபை தவிசாளராக இருக்கிறார் த.ஐங்கரன். வர்த்தகர். அவரை உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளராக நியமித்தபோதே, வர்த்தகர்களை அரசியலுக்கு அழைக்கலாமா என்ற முணுமுணுப்பு கட்சிக்குள் இருந்தது. தமிழ் தேசிய அரசியல் வர்த்தகமாக மாறிக்கொண்டிருப்பதற்கு, வர்த்தகர்கள் அரசியலுக்கு வருவதுதான் காரணமென்ற விமர்சனத்தை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். எனினும், தமிழரசக்கட்சி அவரை வேட்பாளராக நிறுத்தி, தவிசாளராகவும் ஆக்கியது.

கரவெட்டி பிரதேசசபை இரண்டு அமர்வுகளை மட்டும் நடத்திய நிலையில், பிரதேசத்தில் இருந்த குப்பைமேட்டு பிரச்சனையை கையிலெடுத்துள்ளது. மண்டான் வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அந்த குப்பை மேட்டால் கப்பூதுக்கான பாதையொன்றே தடைப்பட்டிருந்தது.

இப்போது அந்த குப்பைமேடு அகற்றப்பட்டு, அதற்காக ஓதுக்கி, சுற்றுவேலியிடப்பட்ட இடமொன்றில் கொட்டப்பட்டுள்ளது. கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் பொறிமுறையை பற்றியும் பிரதேசசபை ஆராய்கிறதாம். நல்ல விடயம்.

ஆனால் அதில் சிக்கல் எங்கு ஏற்பட்டதென்றால், அந்த குப்பைகளை இராணுவம் அகற்றிய விடயத்தில். தனியார் நிறுவனங்களின் மூலம் அந்த குப்பைகளை அகற்றுவதற்கும், இராணுவத்தின் மூலம் அகற்றுவதற்குமிடையில் 30,000 ரூபா வித்தியாசப்பட்டதாம். ஆகவே இராணுவத்தின் மூலம் விசயத்தை முடித்துள்ளார்கள்.

ஆக, விசயத்தையும் முடித்தாயிற்று. 30,000 ரூபாவை மிச்சமும் படுத்தியாயிற்று. பிரதேசசபை தவிசாளர் ஒரு வர்த்தகர். அவர் இந்த அடிப்படையில்தான் சிந்தித்திருப்பார்.

ஆனால், இது தனியே வர்த்தகம் சம்பந்தப்பட்ட விசயமல்ல. வர்த்தக சிந்தனைக்கு அப்பால், அரசியல் சிந்தனைதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மையில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி சொன்ன ஒரு விசயத்துடன், இதை சேர்த்து கவனிக்கலாம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கடுமையாக விமர்சனம் செய்த தளபதி, முத்தாய்ப்பாக சொன்னது- இனியாவது எம்முடன் இணைந்து பணியாற்றி மக்களின் மனங்களை வெல்லப்பாருங்கள் என்பது.

கரவெட்டியில் இராணுவம் குப்பை அள்ளியதும், யாழ் மாவட்ட தளபதி அப்படி சொன்னதும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடந்ததுதான்.

தம்முடன் சேர்ந்து பணியாற்ற சொல்லி இராணுவத்தளபதி அழைப்பு விடுத்தது விகாரமல்ல. இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பணியாற்றுவதுதான் விவகாரமானது!

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை பிரதான அரசியல் கோரிக்கையை வைத்திருக்கும் ஒரு தரப்பு, எப்படி இராணுவத்திடம் இந்த பணியை வழங்கலாம்?

தனியார்துறை அதிக பணத்தை கேட்டார்கள், அதனால் குறைந்த பணத்தை கேட்ட இராணுவத்திடம் வழங்கினோம் என்பது வர்த்தக சிந்தனைக்கு சரி. ஆனால், அரசியல் சிந்தனையில் தவறு.

இராணுவத்தை வெளியேறுமாறு கோரிக்கொண்டு, அன்றாட நிர்வாகத்தில் அதே இராணுவத்தின் உதவியை பெற்றுக்கொண்டிருப்பது எப்படியான அரசியல்?

கரவெட்டி குப்பையை அகற்ற இராணுவத்தை தவிர வேறு மார்க்கமே பிரதேசசபையிடம் கிடையாதென்றால், அது தமிழ் தேசியத்தின் வீழ்ச்சியையே குறிக்கும். இராணுவம் உள்ளிட்ட தரப்புக்களின் உதவியில்லாமல் இயங்க முடியாத ஒரு சமூகம் எழுப்பும் வெற்றுக்கோசங்களாகவே, தமிழ் தேசிய முழக்கங்கள் அரத்தப்படும். இராணுவத்தின் துணையில்லாமல் குப்பையையே அகற்ற முடியாத தரப்பொன்று, எப்படி இராணுவத்தை வெளியேற சொல்லிவிட்டு, சுயாட்சியை கோர முடியும்?

இப்படி சாதாரண விசயங்களை கூட தம்மால் நிர்வகிக்க முடியாமல், யாருடன் முட்டிமோதுகிறோமோ அவர்களின் துணையுடன் இயங்கி கொண்டு, சுயநிர்வாகம் கோருவது, ஒரு பம்மாத்தாக அமையாதா?

தமிழ் தேசியமென்பது என்ன? நரம்பு புடைக்க மேடைகளில் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதா? செயல்பூர்வமான எந்த அர்த்தமும் அதற்கு கிடையாதா? அப்படியொரு சமாச்சாரமும்  வேண்டியதில்லையென, நமது மக்கள் பிரதிநிதிகள் நினைக்கிறார்களா?

தமிழ் தேசியமென்பது வெற்றுக்கோசமல்ல. வெற்றுக்கோசங்களை எழுப்பிக்கொண்டு, தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக யாரும் கூற முடியாது. அதை செயல்பூர்வமானதாகவும் மாற்ற வேண்டும். தமிழ் தேசியத்தின் அடிப்படையில் இயங்கி எல்லா ஆயுத இயக்கங்களுமே, இந்த விசயத்தில் தெளிவுடன் இருந்தார்கள். சுயநிர்ணயம் என்பது அனைத்து விசயங்களிலும் எம்மிலேயே நாம் தங்கியிருப்பதென்பதன் அடிப்படையில் இயங்கினார்கள்.

ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆயுத இயங்கங்களை “மட்டம் தட்டும்“ தமிழரசுக்கட்சி, அடிப்படையான விசயங்களிலேயே கோட்டை விடலாமா? அப்படி கோட்டை விட்டுக்கொண்டு, என்ன அருகதையில் ஆயுத இயக்கங்களை “மட்டம் தட்டிக்“கொண்டிருக்கிறார்கள்?