Take a fresh look at your lifestyle.

மாண்டார் மீளாரோ….
 மாநிலமே பாராயோ….!



ஒன்று கூடித்திரிந்த உறவு
ஓரினத்திற் குரிய மரபு
அத்தனையையும் கருவறுக்க
அடுத்தவனின் நிழலில் நின்று
ஒருவர் பார்க்க ஒருவராய்
ஒடித் தொடித் தெறிந்து,
ஒன்றல்ல ஓரிருநாளில்
ஒன்பதாண்டு ஆனதையா….

அணுவளவும் விரும்பாத
அடுத்தவனின் காலடியில்
அடிமாடாய் அடிபணிய
அவர்களொன்றும் வேற்றவரல்லர்

வயிறாற உணவின்றி
வரிசையிலே கஞ்சி வாங்கி
வதைபட்ட எம்மினத்தை-ஒரு
கதை போல மறந்தோமே

ஆடித் திரிந்த கால்களெலாம்
ஒடிந்தே போனது முள்ளிவாய்க்காலில்
ஒற்றை வார்த்தை பேசாமல்
ஓடி வந்து பார்க்காமல்
ஓரங்கட்டும் உலகோடு
ஒத்தே போகும் தலைமைகளிங்கே



நாம் வாழ நலமாக
தாம் மாண்ட மன்னவருக்காய்
நாம் என்ன செய்தோமென
நம் ஈழத் தாயவளும்
நமை நாடி நிற்கிறாள்
நாவறண்டு சாய்கிறாள்

குருதி வார்த்து வளர்த்த தேசம்
குற்றுயிராய் கிடக்கையிலே
மனமிறுகிப் போனதுவோ?
மறுபிறப்பில் பார்ப்போமென…
உயிர் கொடுக்க துணிவீரே
உலகுக் குறைக்கச் செய்வீரே!

நன்றி
சுதர்சினி நேசதுரை