Take a fresh look at your lifestyle.

மேய்ப்பாரில்லா மந்தைகளாய்……

நில்லென கதிரோனையும்
நிந்திக்கும் சக்தி கொண்டு
நித்திய வாழ்வு கண்டு
நிம்மதியாய் வாழ்ந்த இனம்
நிதமெரு வாழ்வுயென
நிலைதடுமாறிப் போனதுவோ?

பண்டாட்டில் ஊறியவன்
படும் பாடு பார்த்தீரோ…
வந்தேறிகளின் வசையினிலே
வருங்காலம் பாழானதுவோ?

மொட்டவிழ்ந்த முல்லைகளாய்
மெல்லிதழ் விரித்த மலர்களாய்
மெல்லத் தோகை விரித்தாடிய
மென்பாத மகவு எல்லாம்
மேனி தின்னும் கயவர்களால்
மேதினியில் வேகுதையா…

வாழ்விழந்த பெண்மையும்
வரையில்லா மங்கையரும்
வறுமையில் உறைந்து நிற்க
வகை செய்ய மாட்டீரோ?

அக்கினிப் பறவையென
மீளெழுந்து வாராயோ
அழிக்க நினைப்பவன் யாராயினும்
மோதி அழிக்க மாட்டாயோ?

காலதேவன் கட்டளையில்,
காற்றுக்கு ஏது ஓய்வு
கடல் அலைக்கேது அமைதி
காட்டாற்று வெள்ளமென
கரைபுரண்டு நீ ஓடு…

தண்ணிலவும் செங்கதிரும்
தமிழனுக்கென்றும் உரித்தென்று
தலைவன் வழி காட்டலில்
தனியொருவனாய் நிமிர்ந்திடு
தரணி தட்டும் உன் தலையால்
தமிழர் அணி நிமிரட்டும்

நன்றி
சுதர்சினி நேசதுரை