Take a fresh look at your lifestyle.

இரணைதீவில் 359 நாளாக போராட்டம் 190 குடும்பங்களுக்கு அன்றாட கடமைகளுக்கு அனுமதி!

வடதழிழீழம், இரணைத்தீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் அறிவித்துள்ளார்

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ்,பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, ஸ்ரீலங்காவின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் இன்று இரணைதீவுக்கு விஜயம் செய்தனர்.

இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அங்கு சென்ற மேற்படி குழுவினர் பொது மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
190 குடும்பங்களுக்கு தமது அன்றாடக் கடமைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இம் மக்களின் கவனவீர்ப்புப் போராட்டம் 359 ஆவது நாளாக நேற்றும் தீர்வின்றித் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.