Take a fresh look at your lifestyle.

7000 ரூபாவுக்காக எம்பிக் குதித்த தவராசா, ஒரே பதிலில் வாயை அடைத்த விக்கி!

 

நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்குச் செல்வது போன்றது, அங்கே மாலை மரியாதை அளித்து மேள தாளத்துடன் அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கக் கூடாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.

அதன்போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, “முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திரும்பத் தருமாறு கோரி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

“நினைவேந்தல் என்பது மரண வீட்டுக்குச் செல்வது போன்றது. அங்கே மேள தாளத்துடன், மாலை போட்டு அழைத்துச் செல்லமாட்டார்கள். அதை நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது.

நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற இடத்தில் அமைக்கப்பட்ட பந்தல்கள், அந்த இடத்தில் வெறும் காலுடன் நடக்க கூடியவாறு அதனை துப்பரவு செய்தமை, குடிக்க நீர் வழங்கியமை போன்ற செலவுகள் மாகாண சபை உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் செய்யப்பட்டதே” என தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், “முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஒரு புனிதமான தினம். அது நடந்து முடிந்ததை பற்றி கதைத்து அதனை கொச்சைப்படுத்த கூடாது. எனவே அது தொடர்பில் சபையில் கதைப்பதை நிறுத்துவோம். எதிர்க்கட்சி தலைவர், அதற்கு கொடுத்த பணத்தை கோயில் உண்டியலில் போட்ட பணமாக நினையுங்கள். உண்டியலில் போட்ட பணத்தை திருப்பி தாருங்கள் என கேட்க கூடாது” என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தனது கோரிக்கையை கைவிட்டார்.