Take a fresh look at your lifestyle.

காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்

காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் உத்தேச சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 2010ஆம் ஆண்டு 19ஆம் இலக்க மரண சான்றிதழ் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இந்த உத்தேச சட்ட மூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பல்லாயிரக்கணக்கான காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களுக்கு இந்த புதிய சட்டம் நன்மை பயக்கும் என்பதோடு, அவர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் அதிகளவானோர் காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகும் நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுவதோடு, கடந்த 1994ஆம் ஆண்டு தொடக்கம் 65 ஆயிரம் பேர் காணாமற்போயுள்ளதாக இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

சொத்துக்களுக்கான உரிமங்களை உறுதிப்படுத்தல், சமூக நலக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளுதல், ஓய்வூதிய கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இந்தச் சான்றிதழ் உதவியாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் காணாமற்போனவர்களுக்கு இவ்வாறான சான்றிதழ்கள் வழங்கும் இடைக்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வழமை எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

 


 

காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்க அமைச்சரவையில் அங்கிகாரம்!

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போரினால் காணாமல் போன ஆயிரக் கணக்கான மக்களுக்கான அவர்களது நிலைமையை விளக்கும் வகையில் காணவில்லை சான்றிதழை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் காணாமற் போன நபர்களுக்காக குறித்த நபர் உயிருடன் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஒன்றினை வழங்குவதற்கும், காணாமற் போனவர்கள் உயிருடன் இருக்கிறார் அல்லது உயிரிழந்து விட்டதாக தெரியவரும் இடத்து நபர் உயிருடன் இருக்கிறார் அல்லது காணாமற் போய் உள்ளார் என்ற சான்றிதழை உறுதி செய்து கொள்வதற்கும், அல்லது குறித்த நபருக்காக மரண சான்றிதழ் ஒன்றினை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று 2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவு செய்யும்  சட்டத்தில் திருத்தம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந் நடவடிக்கையின் மூலம் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், அல்லது தமது உறவினர்கள் உயிருடன் உள்ளார்களா இல்லையா என இன்று வரை தேடி அலைபவர்களுக்கு சிறந்த பலனுள்ளதாக அமையும். இலங்கையில் காணமால் போனவர்கள் தொடர்பில் 1994 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 65,000 முறைப்பாடுகளை தற்போது வரை முறையிடப்பட்டுள்ளது.

எந்தவித தகவல்களுமற்ற விசேடமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல்களினால் அல்லது அம்மோதல் தொடர்பில் அல்லது அம்மோதலின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புக்கள் காரணமாகவும், அரசியல் அமைதியின்மை காரணமாகவும், பொதுமக்கள் குடும்பங்கள் காரணமாகவும், பலவந்தமாக செய்யப்படும் கடத்தல்கள் தொடர்பாகவும் காணாமல் போயுள்ள நபர்களை பதிவு செய்வதற்கான தேவை எழுந்துள்ளது.

ஆகவே பதிவு செய்தல் மூலம் மற்றும் காணாமற் போன நபர்களது உறவினர்களுக்கு ‘காணவில்லை சான்றிதழை’ வழங்குவதன் மூலம் காணாமற் போன நபர்களது சொத்துக்களையும் உடமைகளையும் தற்காலிகமாக முகாமைத்துவம் செய்வதற்கும், காணாமற் போன நபர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கும், சமூக நலன்புரி சொத்துக்களையும் விண்ணப்பிப்பதற்கும், காணாமற்போன நபர்கள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன்வைப்பதற்கும், அவர்கள் சார்பாக தோற்றுவதற்கும் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.