Take a fresh look at your lifestyle.

அதிகாரிகளின் துணையுடன் காட்டுமரங்கள் கடத்தல்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளின் துணையுடன் பெறுமதி வாய்ந்த காட்டுமரங்கள் கடத்தப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மூப்பன்குளம், சிறாட்டிகுளம், மூன்றுமுறிப்பு, கொம்புவைத்தகுளம், நட்டாங்கண்டல், பனங்காமம், விநாயகபுரம், ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளிலிருந்து மிகவும் பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை உள்ளிட்ட காட்டுமரங்கள் வெட்டப்பட்டு வேறு மாவட்டங்களிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுகின்றன.

இப்பகுதிகளில் உள்ள மக்கள் தமது வீட்டு த்திட்டத்தேவைகளுக்கான மரங்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதுடன் அவற்றுக்கான அனுமதிகளை வழங்கவும் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தினமும் பகல் வேளைகளிலும் இரவு வேளைகளிலும் பெருமளவான காட்டுமரங்கள் ஒரு சில அதிகாரினது துணையுடன் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு போலியாவணங்களுடனும் சட்டவிரோதமான முறையிலும் கொண்டு செல்லப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டிய அதகாரிகளின் துணையுடன் இவ்வாறான மரக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் இதனை தடுக்க மேலதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் கரும்புள்ளியான் காட்டுபகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்த 27 முதிரை மரக்குற்றிகளை பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து வனவள திணைக்கள அதிகாரிகள் மீட்டமை. கடந்தசில தினங்களாக கிளிநொச்சி மற்றும் பளைப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட மரங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.