Take a fresh look at your lifestyle.

கசிப்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிளிலும் இடம்பெற்று வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளை கட்டுப்படுத்தி ஒரு இளைய தலைமுறையினை பாதுகாப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்துக் காணப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் குறைவடைந்து காணப்பட்டபோதும் தற்போது இச்செயற்பாடுகள் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் அதிகரித்துக் காணப்படுகின்றன.

குறிப்பாக தர்மபுரம், புளியம்பொக்கணை, பெரியகுளம், உருத்திரபுரம், பன்னங்கண்டி, வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் இவ்வாறான சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் காணப்படுகின்றன.

இதனால் இளவயதுடையவர்கள் மதுபாவனைக்கு அடிமையாவதுடன் அவர்களை பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபடச்செய்கின்றன. இதனைவிட கூடுதலான குடும்ப பிணக்குகள் என்பனவும் ஏற்படுகின்றன.

இவ்வாறான சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளை தடுத்து எதிர்காலத்தில் நல்ல சமுகம் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஏற்ற வழிவகைகளை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.