Take a fresh look at your lifestyle.

கிளிநொச்சி திருவையாறு ஏற்றுநீர்ப்பாசனத்திட்டத்தின் அபிவிருத்தி வேலைகள்

கிளிநொச்சி திருவையாறு ஏற்றுநீர்ப்பாசனத்திட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் 450 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் என்.சுதாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாக காணப்படும் இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் நீர் விநியோக வாய்க்கால்கள் கழிவு வாய்க்கால்கள் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இரணைமடுக்குளத்தின் கீழான ஏற்று நீர்ப்பாசனத்திட்டமாக காணப்பட்ட திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் முற்றாக செயலிழந்து கட்டுமானங்களும் அழிவடைந்து காணப்படுகின்றன. இதனைப்புனரமைத்து தருமாறு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பிரதி நீரப்பாசனப்பணிப்பாளர் என்.சுதாகரன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப்பணிகள் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஐந்தாவது திட்டமாக திருவையாறு ஏற்றுநீர்ப்பாசனத்திட்டம் 450 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 450 மில்லியன் ரூபா செலவில் இரணைமடுத்திட்டத்தின் கீழ் ஐந்தாவது திட்டமாக இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் 600 ஏக்கர் மேட்டுநிலப்பயிர்செய்கைகளை மேற்கொள்ளமுடியும். இதற்கான புனரமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் மிக விரைவில் கோரப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.