Take a fresh look at your lifestyle.

மழையினால் பாதிப்பு

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஐயாயிரத்து 467 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுபோக செய்கையின் போது மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 772 ஏக்கர் நெற் பயிர் செய்கை மற்றும் மூவாயிரத்து 264 ஏக்கர் மேட்டு நிலச்செய்கை என்பனவும் முழுமையாக அறிவடைந்துள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மண் சரிவுகள் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் பாதிப்புக்கள் தொடர்பாக மதிப்பீடுகள் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்புகள் தொடர்பாக மாவட்டச்செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 95 கிராம சேவகர் பிரிவுகளில் 80 கிராம சேவகர் பிரிவுகளில் வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் ஐயாயிரத்து 467 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 338 குடும்பங்கள் நலன்புரிநிலையங்களிலும் இரண்டாயிரத்து 276 குடும்பங்கள் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இவ்வாண்டு சிறுபோகத்தின் போது மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையில் ஆயிரத்து 772 ஏக்கர் நெற் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதுடன் மூவாயிரத்து 264 ஏக்கர் மேட்டு நிலச்செய்கைகள் அழிவடைந்துள்ன.

அத்துடன் வயல்நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய உப உணவுப்பயிர் செய்கைகளும் அழிவடைந்துள்ளன எனவும் மாவட்ட செயலகப்புள்ளி விபரத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உட்கட்டுமான வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது 16 வீடுகள் முழுமையாகவும் 215 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் கிராமிய வீதிகள் பிரதான வீதிகள் பாலங்கள் மதகுகள் என்பனவும் சேதமடைந்துள்ளன என்றும் 185 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீன்பிடி வள்ளங்கள் வலைகள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொன்றும் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான கடலட்டை வளர்ப்பு பண்ணைகள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர குளங்களின் கீழான கட்டுமானங்கள் நீர்ப்பாசனக்கால்வாய்கள, உவர் நீர்த்தடுப்பணைகள் எனபனவும் சேதமடைந்துள்ளன என மாவட்ட செயலகப்புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.