Take a fresh look at your lifestyle.

மாணவர்களே… விழித்தெழுங்கள் !!

ஒவ்வொருவரும் பொதுநோக்கின்றி தனித்து செயற்பட்டதன் விளைவு தான் இன்று கள்வர்களின் கை வரிசை ஒருபுறம் காமூகர்களின் அங்க சேட்டைகள் ஒரு புறம், போதைக்கும்பல்களின் அட்டகாசம் வாள்வீச்சுக்கள்   இவ்வாறு பூதாகாரமாக எம்முன்தோன்றியுள்ளது வடமாகான முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

நாட்டிலுள்ள 7,000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்கின்ற வேலைத்திட்டத்தின் வடமாகாணத்திற்கான நிகழ்வு இன்று (15-06-2016) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகான முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் வடபகுதி மாணவர்கள் எத்தனையோ இடையூறுகளுக்கும் மத்தியிலும்  கல்வி நடவடிக்கையை கைவிடாது, குப்பி விளக்குகளிலும் பதுங்கு குழிகளுக்குள்ளும் இடம்பெயர் முகாங்களுக்குள்ளும் கற்று முன்னேறியதுடன் வடமாகாணத்தில் கல்வியில் போட்டிபோட்டு ஒன்றையொன்று மிஞ்சுவதாக கல்வி நடவடிக்கையில் முன்னணியில் இருந்துள்ளனர்.

நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இயல்பு வாழ்க்கை ஓரளவிற்கு திரும்பியுள்ள போதும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைள் குறைவடைந்து க.பொ.த.சாதாரணப் பரீட்சைப்பெறுபேறுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.

இவ்வாறான பின்னடைவிற்கு பல்வேறான காரணங்களை எடுத்துக்கொள்ளலாம்.

இந்நாட்டிலேயே யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது வடபகுதியிலே மிகுந்த ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

பெண் பிள்ளைகளும் சின்னஞ்சிறுசுகளும் எந்தவித பயமும் இன்றி வீதிகளில் பயணிக்கவும் வீடுகளில் தனித்திருக்கவும் முடியும்.

ஆனால் யுத்தம் முடிவுற்றபோது பகலில் பெண் பிள்ளைகளும் சிறுவர்களும் வயது வந்தவர்களும் வீடுகளில் தனித்திருக்கவும் வீதிகளில் செல்லவும் முடியாத ஒரு புதிய கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

கள்வர்களின் கை வரிசை ஒருபுறம், காமூகர்களின் அங்க சேட்டைகள் ஒரு புறம், போதைக்கும்பல்களின் அட்டகாசம், வாள்வீச்சுக்கள்  என இப்பகுதியையே உலுக்கி வைக்கக்கூடிய இழிநிலை இங்கு உருவாகியுள்ளது.

ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் போர்வீரர்கள் இங்கு பாதுகாப்பிற்கென  நிறுத்தி வைக்கப்பட்டபோது தான் இதெல்லாம் நடைபெறுகின்றது. இராவணுவத்தால் மக்கள் பாதுகாக்கப்படுவதாக தோன்றவில்லை என்றே குறிப்பிடவேண்டும்.

பிள்ளைகள் பாடசாலை செல்லுகின்றார்களா கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்களா மற்றும் வீட்டுக்கடமைகளில் ஈடுபடுகின்றார்களா என பெற்றோர்கள் கவனம் எடுப்பதாக இல்லை.

பாடசாலைகளிலும் இவற்றைக்கவனிப்பதற்கு அதிபர் ஆசிரியர்களும் சில வேளை தவறிவிடுகின்றார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் பொதுநோக்கின்றி தனித்து செயற்பட்டதன் விளைவு தான் இவ்வாறு பூதாகாரமாக எம்முன்தோன்றியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.