Take a fresh look at your lifestyle.

பல குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை

கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை இத்தாவில் வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் மக்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய வெடிபொருள் ஆபத்தான பகுதியாக காணப்படும் இப்பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பணிகள் நிறைவு பெறாமையினாலும் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலும் இத்தாவில், முகமாலை, வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் வேம்பொடுகேணிஆகிய பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ள 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.

இப்பகுதியில் வெடிபொருள் அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கருத்து தெரிவிக்கும் போது அதிகயுத்தம் இடம்பெற்ற பகுதியாக காணப்படும் இப்பகுதியில் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் பரஸ்பரம் வெடிபொருட்களையும் நிலக்கண்ணி வெடிகளையும் புதைத்துள்ளன. இவை மிகக் கூடிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அபாயகரமான பகுதியாக காணப்படுகின்றது.

இதனால் வெடிபொருட்களை அகற்றுவதில் தாமதங்கள் காணப்படுகின்றன.

இப்பகுதிகளில் பணிகளை முன்னெடுக்கும் போது உயிரிழப்புக்கள் கூட ஏற்பட்டுள்ளன. தற்போது நவீன கருவிகள் மூலம் இதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மீள்குடியமர்விற்காக விண்ணப்பித்துள்ள 257 குடும்பங்கள் வெளிமாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிளிலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.