Take a fresh look at your lifestyle.

20 ஆண்டுகளின் பின் மூதூர் படுகொலை விசாரணை

20 ஆண்டுகளின் பின்னர் மூதூர் படுகொலை விசாரணைக்கு திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான விசாரணை 20 வருடங்களின் பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசாரணை நேற்றும் இன்றும் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், 20 வருடங்களுக்கு முன்னர் இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.

1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி நள்ளிரவு வேளையில் கிராமத்துக்குள் புகுந்த இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 26 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், 39 பேர் காயமடைந்தனர்.

மூதூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப கட்ட விசாரணையின்போது மூதூரில் அமைந்துள்ள தெகியத்த இராணுவ முகாமைச்சேர்ந்த எட்டு இராணுவத்தினர் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.

அக்காலத்தில் நிலவிய யுத்த சூழலைக் கருத்திற்கொண்டு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விசாரணை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள், சிவில் அமைப்பினர் உட்பட 121 பேர் சாட்சியாளர்களாக மூதூர் காவல்துறையினரால் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன்று அனுராதபுரத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது 20 சாட்சியாளர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தபோதிலும் அதில் 16 பேரே வருகை தந்திருந்தனர்.  ஏனைய நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் விசாரணையின் போது சாட்சியமளித்த பெண்ணொருவர், எதிரிகளில் ஒருவரே தனது கணவனை சுட்டுக் கொன்றவர் என அடையாளம் காட்டினார்.

எதிரிகளாக குறிப்பிட்ட எட்டு இராணுவ வீரரில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 6 பேரே விசாரணைக்கு சென்றுள்ளார்கள் முதலில் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் 6 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.