Take a fresh look at your lifestyle.

இலங்கையில் பதிவாகிய சித்திரவதைச் சம்பவங்கள்

இலங்கையில் கடந்த ஆண்டில் 413 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி திபீகா உடகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தங்களை பிரயோகித்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடுதல் ஆகிய 413 சம்பவங்கள் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 43 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்ட எண்ணிக்கை அவை என்றாலும் அதனை விடவும் அதிகளவான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

நபர்களை காணாமல் போகச் செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் இடம்பெறவில்லை. சித்திரவதைச் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

குறிப்பாக பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் போது சித்திரவதைகள் இடம்பெறும் சம்பவங்கள் பதிவாகின்றன.

சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கு அரசியல் சாசனத்தில் சட்டங்கள் காணப்படுகின்றன.

சித்திரவதைகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. 1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சித்திரவதைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.

அதிகாரத்தை பயன்படுத்தி உடல் அல்லது உள ரீதியாக சித்திரவதைகளை மேற்கொள்ள முடியாது. தகவல்களை பெற்றுக் கொள்ளவும் தண்டனை விதிக்கவும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சித்திரவதை மேற்காள்ளப்படுகின்றது.

இது சட்டத்தின் பிரகாரம் குற்றச் செயலாகும். இதற்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டியது அவசியமாகின்றது.

சித்திரவதைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் மந்த கதியொன்று காணப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள சித்திரவதை செய்யக்கூடாது. உளவியல் ரீதியான பல்வேறு அணுகுமுறைகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.

அவ்வாறான முறைமைகளே பயன்படுத்த வேண்டும். பொலிஸாரின் தொழில்சார் திறமைகளை விருத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.