Take a fresh look at your lifestyle.

குடிநீர் தட்டுப்பாடு

கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு இருபதாயிரம் லீற்றர் தண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக பூநகரி பிரதேச சபை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகளவான குடிநீர் நெருக்கடி எதிர்கொள்ளும் பகுதியாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது.

அதாவது பூநகரி பகுதியில் உள்ள பதினொரு கிராம அலுவலர் பிரிவுகளுக்கு வருடம் முழுவதும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய போதும் அவர்களுக்கான குடிநீர் உரிய காலங்களில் இடைப்பதில்லை என்றும் இதனால் தாங்கள் குடிநீர் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கறுக்காய் தீவு செட்டிய குறிச்சி ஞானிமடம் சித்தங்குறிச்சி மறவன் குறிச்சி கொல்லக்குறிச்சி இராமலிங்கம் வீதி பரமன் கிராய் வாடியடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

மேற்குறித்த பகுதிகளில் உள்ள குடும்பங்கள் தமக்கான குடிநீர் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச சபையுடன் தொடர்புகொண்டு கேட்டபோது கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் மூன்றில் இரண்டு பகுதி குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டிய பகுதிகளாக காணப்படுகின்றன. அதாவது பதினொரு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பொருட்டு இருபதாயிரம் லீற்றர் தண்ணீர் விநியோகிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் குடிநீரைப்பெறக்கூடிய நீர் நிலைகளும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அதை வெளியிடங்களில் இருந்து பெறும் நிலை காணப்படுகின்றது. சபையின் வருமானத்தை வைத்து குடிநீர் விநியோகம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது என்றும் சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.