Take a fresh look at your lifestyle.

“சொந்த நிலமில்லாமல் விடுதலை பற்றி பேச முடியாது”

இனமொன்றுக்கு சொந்த நிலமில்லாமல் தமது விடுதலை பற்றி பேசிவிட முடியாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.  வேம்படுகேணி கிராம சேவையாளர் பிரிவில் இந்திராபுரம் கிராமத்தில் மிதிவெடி அகற்றும் பணிகள் நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பதினெட்டு வருடங்களின் பின்னர் தமது கிராமத்தை நேரில் சென்று பார்வையிட்னர்.

இதன் போது மக்கள் சந்திப்பிற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அழைக்கப்பட்டிருந்தார். இங்கு மக்கள் முன்பாக உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த முகமாலை பகுதியில் தான் உச்சகட்ட சமர் இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடம்பெற்றிருந்தது.

இதன் போது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். எமது விடுதலைக்காக தான் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூருகின்றோம். எமது காணிகளுக்குள் நாங்கள் செல்ல முடியாத நிலையே இப்போதும் இருந்து வருகின்றது. எனினும் எமது உறுதியினால் எமது காணிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்று வருகின்றோம்.

இந்த நிலை மேலும் தொடர வேண்டும். இராணுவம் எமது காணிகளை பிடித்து வைத்துள்ளது, எமது காணிகளுக்குள் செல்ல விடுகின்றனர் இல்லை என்பதற்காக நாம் மனம் சோர்ந்து விடக்கூடாது. தொடந்து எமது காணிகளுக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் இருக்க வேண்டும். இந்த உறுதி இந்த முகமாலை பிரதேசத்திலும் இருக்க வேண்டும். அதனையே நாங்களும் எதிர்பார்க்கின்றோம்.

உச்சகட்ட சமர் நடைபெற்ற இடமான முகமாலை பகுதிக்குள் பல இலட்சம் மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றுவதற்கு தனியே மனிதர்களால் முடியாத நிலையில், இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு இப்போது தான் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர மிதிவெடி அகற்றலுக்கு அமெரிக்க ஜப்பான் நாடுகளே பண உதவி வழங்கி வருகின்றன.

எனினும் இந்த நாடுகள் வழங்கும் நிதியுதவிகள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் மிதிவெடி அகற்றலில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக வடபகுதியில் மிதிவெடி அகற்றலில் ஏற்படும் தாமதத்திற்கு மூல காரணமாக நிதிப்பற்றாக்குறையே உள்ளது. அண்மையில் வடக்கிற்கு வந்த அமெரிக்க குழுவினர் மிதிவெடி அகற்றும் இடங்களை பார்வையிட்டு சென்றனர்.

இவர்கள் பார்வையிட்ட பின்னர் எமது கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனையும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதன் போது எமது மக்களின் மீள்குடியேற்றமே எமது முதலாவது தேவையாகவுள்ளது என அவர் வலியுறுத்தி இருந்தார். ஆகவே மிதிவெடி அகற்றலில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் மீள்குடியேற்றம் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் முதல் தடவையாக இருநூறு மீற்றர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படும் இடத்தில் முதலில் நாங்கள் வந்து மீள்குடியேற வேண்டும். அவ்வாறு மீள்குடியேறினால்தான் நாம் எந்தளவிற்கு ஆர்வமாக உள்ளோம் என மற்றவர்களுக்கு புரியும். இதன் மூலமே ஏனைய இடங்களை துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.