Take a fresh look at your lifestyle.

யாழில் பாடசாலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் 5 பேருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணிப் பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவி ஒருவரை வன்முறைக்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களில் 5 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் வன்முறைக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரும், அந்த குற்றத்தை மறைக்க உதவியவர்கள் என்னும் குற்றத்தில் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியைகள் உட்பட ஒன்பது பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதில்  அதிபர் மற்றும் மூன்று ஆசிரியைகள் உட்பட நால்வர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்கள் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில், நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களும் மன்றில் நிறுத்தப்பட்டனர். குறித்த சந்தேக நபர்களின் சட்டத்தரணி அவர்களைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, பிணை விண்ணப்பத்தை நிகாரித்த நீதிவான்  சந்தேக நபர்களை எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.