Take a fresh look at your lifestyle.

கசிப்பு உற்பத்தி, விற்பனைகள் அதிகரிப்பு

கிளிநொச்சி கட்டைக்காடு வட்டக்கச்சிப் பகுதிகளில் என்றுமில்லாதவாறு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கட்டைக்காடு வட்டக்கச்சி சின்னச்சந்தையடி ஆலடி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ்வாறு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் என்பன பாரிய தொழிற்சாலை போன்று இயங்கி வருகின்றன.

அத்துடன் குறிப்பிட்ட சிலர் மாத்திரம் இவ்வாறான சட்டவிரோத தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் இவை இதனைக்கட்டுப்படுத்த வேண்டியவர்களின் துணையுடன் இடம்பெற்று வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிகளில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளால் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் ஓர் இளைய சமுதாயம் சீரழிக்கப்படுகின்றது என்றும் இதனை தடுப்பதற்கு இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனைக்கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.