Take a fresh look at your lifestyle.

கரும்புலிகளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நினைவு கூரல்

தம் இனத்திற்காக தமது உயிரையே ஆகுதியாக்கிய கரும்புலிகளை நாள் இன்றைய தினம் தமிழர் தேசம் எங்கும் நினைவு கூரப்பட்ட நிலையில், ஈழத்தில் சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்களின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நினைவு கூரப்பட்டுள்ளது. 54021இன்று காலை பத்து மணியளவில் பல்கலைக்கழக பிரத்தியோக இடமொன்றில் நடந்த இந்நிகழ்வில்,  மாணவர்கள் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர். மேலும் சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியமையால் மிகவும் சாதாரண முறையில் உணர்வு பூர்வமாக வீர மறவர்கள் நினைவு கூறப்பட்டார்கள். மேலும் பல்கலை வளாகத்தை சூழ புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளும் பரவலாக காணப்பட்டன.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 29 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.

இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள் 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு சிறிலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீர வரலாறானார்கள் 2007ம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம் மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, 2009 ஆம் ஆண்டு வான் கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீர வரலாறானார்கள். வெளியில் தெரியாத அந்த அற்புத மனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.

கரும்புலிகளின் வரலாறு

650235“ஒப்பிரேசன் லிபரேசன்” எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது, இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கி விட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.

வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் “லிபரேசன் ஒப்பிரேசன்” இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் ருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத் தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.

கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில், நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.

இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளின் அச்சுறுத்தலால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சினையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.