Take a fresh look at your lifestyle.

கள்விற்பனை நிலையத்தினால் கலாச்சாரச் சீரழிவு

Toddy Drinkerஇரணைமடு சந்தியில் அமைந்துள்ள கள்விற்பனை நிலையத்தினால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பாரதிபுரம் பகுதியில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள குறித்த கள்ளு தவறணையில் மது பிரியர்கள் மக்களிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக போதையான நிலையில், அடிக்கடி, குறித்த பகுதியில் சண்டைகள் இடம்பெறுவதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு7மணியளவில் கத்தி குத்தும் இடம்பெற்றதாகவும், இதனால் 2 பேர் பலத்த காயங்களிற்கு உள்ளானதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த தவறணையில் கள்ளு மாத்திரமன்றி கஞ்சா, கசிப்பு விற்பனையும் காணப்படுவதாகவும் தெரிவிக்கும் பிரதேச மக்கள், இதன் காரணமாக கலாச்சார சீரழிவும்இடம்பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாரதிபுரம் மக்கள் பிரயாணம் செய்யும் பிரதான வீதியாக, அவ்வீதி காணப்படுவதாகவும், இரணைமடு பொது சந்தைக்கு முன்பாக குறித்த தவறணை காணப்படுவதாகவும் தெரிவிக்கும் பிரதேச மக்கள், குறித்த வீதியைப் பயன்படுத்தி பெண்கள், குறிப்பாகச் சிறுவர்கள் சென்று வரமுடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மது போதையில் இருப்பவர்கள் தீய வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கும் மக்கள், பாடசாலை மாணவர்கள் அவ்வீதியினூடாகப் பிரயாணிக்க முடியாத அளவிற்குக் கலாச்சார சீர்கேடு காணப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

Tavernபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், குறித்த பொது மக்கள் அதிகம் பாவனையில் உள்ள பகுதியில் கள் விற்பனை நிலையம் அமைந்துள்ளமை தொடர்பில் பல்வேறுபட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் எவராலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் பெண்கள், சிறுவர்கள் சுதந்திரமாக நடமாடவும், படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் நிலை போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் நிலவாது தடுக்கும் வகையிலும், பொலிசாரும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், குறிப்பாக தமது வாக்குகளால் மக்கள் பிரதிநிதிகளாக்கப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.