Take a fresh look at your lifestyle.

வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பெண்களை ஏமாற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இந்து புரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள குடும்ப பெண்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றியமை தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  குறித்த கிராமத்திலுள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் தாய்மாரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி, போலி ஆவணங்களுடன் வெளிநாடுகளிற்கு அனுப்ப உதவியதாக கூறி இந்து புரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயற்பட்டதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,

குறித்த கிராமத்தில் வசித்த 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை, அவரிற்கு கடைசி குழந்தை 2வயதாக இருக்கின்ற போதிலும், குடும்ப வறுமையை காரணம் காட்டி அப்பெண்ணை ஏமாற்றி வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக அனுப்ப முற்பட்டதாக சம்மந்தப்பட்ட குடும்பத்தின் கணவர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாங்குளம் பொலிசார் குறித்த பெண்ணை பாதுகாப்பாக குடும்பத்தடன் இன்று ஞாயிற்றுக்கிழமை இணைத்துள்ளனர். இதன்போது குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தனது வங்கி கணக்கினையும் அப்பெண்ணிடம் அனுப்பியதாகவும், கணவருக்கு தெரியாமலேயே வெளிநாடு செல்ல முற்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். தமது வறுமையை பயன்படுத்தி கிராமத்தில் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் செயற்படுவது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் பொலிசில் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைந்த வயதுடைய பிள்ளைகள் உள்ள தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற செல்வது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தடைகளை வதித்துள்ள போதிலும், பல பெண்கள் குடும்ப வறுமையை காரணம் காட்டி வெளிநாடுகளிற்கு ஏமாற்றி அனுப்பப்படும் சந்தர்ப்பங்கள் அதிரித்து வருகின்றது. ஒரு கிராமத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர்கள் இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களிற்காக பெண்களை அனுப்புவதற்கு உதவுகின்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தின் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.