Take a fresh look at your lifestyle.

கால் நடைகளுக்கான மேச்சல் தரவைகள் நிலமாக நூறு ஏக்கர்

கிளிநொச்சி மாவட்டத்தின் கால் நடைகளுக்கான மேச்சல் தரவைகள் நிலமாக நூறு ஏக்கர் கண்டாவளைப் பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்டு  அதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பினையும் பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட ஓர் மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றபோதும் கால்நடைகளை பயிர் செய்கை காலங்களில் பராமரிக்கக் கூடிய வகையில் மேச்சல் தரவைகளின்றிக் காணப்படுகின்றது. ஏற்கனவே மேச்சல் தரவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்களாகவும் பயிர் செய்கை நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இதனால் வருடாந்தம் பயிர் செய்கை காலங்களில்,  திறந்த வளர்ப்பு முறையினை மேற்கொள்ளும் கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மேச்சல் தவைகள் இன்றி வேறு இடங்களிற்குக் கொண்டு செல்லவேண்டிய நிலை காணப்படுவதுடன் இவ்வாறு கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள கால்நடைகளை  பளை மற்றும் பூநகரி பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள தனியார் காணிகளுக்கு கொண்டு செல்லும் போது கால்நடைகள் களவாடப்படுகின்றமை குறித்த பகுதிகளில் தோட்டச்செய்கை போன்ற பயிரழிவுகள் ஏற்படுத்தப்படுகின்றமை போன்றவற்றால் கால்நடை பண்ணையாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் அடையாளங்கண்டு அவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை என்றும் இதன் முதற்கட்டமாக கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கல்மடு நகர் பகுதியில் நூறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு கால்நடைகளுக்கான மேச்சல் தரவை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேச்சல் தரவைகளுக்கான இடங்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கான அனுமதிகளை கோரும் பொருட்டு அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.