Take a fresh look at your lifestyle.

நித்திரையில் எறிகணை வீழ்ந்து இரத்தம் உறைந்தபடி குடும்பமே இறந்து கிடந்தது!

தமிழினவழிப்பு நாட்களின் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் தமிழினம் எதிர் கொண்ட அவலங்களின் மீளும் காட்சிகள்.

ஏப்ரல் மாதம் 2009 மாத்தளன் பொக்கணைப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் மனங்களில் என்றுமே மாறாத வடுவாக சிங்களப்பேரினவாதம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அமைத்திருந்தது.


ஒரே நாட்டில் ஒன்றாக வாழும் மக்களாக இருந்தாலும் ஈவிரக்கமின்றி மாபெரும் இனவழிப்பை எப்படி எம்மினம் மீது கட்டவிழ்த்துவிட்டது?என்ற கேள்வி பலருடைய மனங்களில் எழுந்தாலும் அனைத்துக்கும் ஒரே பதில் தாள் விடையாக அமையும். அது தமிழினம் அழிய வேண்டும், தமிழர் என்றும் இலங்கைத்தீவில் அடிமைகளாக இரண்டாம் தர மனிதர்களைப்போல வாழ வேண்டும் என்பதே.

ஏப்ரல் மாதம் 20 நாளில் மாத்தளன் பொக்கணைப்பகுதிளை சிங்களப்படைகள் வன்வளைப்பு செய்யும் இராணுவ நடவடிக்கையின் கோரத்தாண்டவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கிடக்க, மீதமானோர் கையில் கிடைத்தவைகளுடன் முள்ளிவாய்க்கால் நோக்கி இடம்பெயர, பெருந்தொகையானோர் காயமடைய, என்ன செய்வதென அறியாது மக்கள் பெருவலியை சுமந்தபடி சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.
காயமடைத்தவர்களால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை திக்குமுக்காடிக்கொண்டிருந்தது.

மாத்தளன், பொக்கணைப்பகுதியில் இருந்த மக்களுடைய உறவுகள் அவர்களுக்கு என்ன நடந்தது என அறிய ஆவலுடன் அலைந்து கொண்டிருந்தனர். இத்தனைக்கும் இரட்டை வாய்க்கால், கப்பலடிப்பகுதிகள் இராணுவத்தின் எறிகணை வீச்சுக்களால் அதிர்ந்த வண்ணம் மிருந்தது. என்னுடைய குடும்பமும் உறவுகளும் பொக்கணைப்பகுதியில் தான் இருந்தார்கள். ஆனால் மாலை நேரமாகியும் எந்தத் தொடர்புகளும் கிடைக்காத நிலையில் பொக்கணைக்கு நேரில் சென்று பார்ப்பதென முடிவெடுத்து புறப்பட்டேன்.

ஆனால் என்னுடைய நண்பர்கள் தனியே போகவேண்டாம். அங்கு நிலைமை மோசமாகவுள்ளது வேண்டுமென்றால் நாங்களும் சேர்ந்து போவோமென இருவர் என்னுடன் புறப்பட்டனர்.

கடலலை அடிக்கின்ற கரையினூடே பயணித்தோம். கப்பலடி, இரட்டைவாய்க்கால் பகுதி கரையோரங்கள் மீது சிங்களப்படைகள் தொடர் எறிகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்தனர். இருந்தும் நாம் அவ்வழியே பயணித்து கொண்டிருந்தோம். இரட்டைவாய்க்கால் பகுதி கடந்து வலைஞர் மடம் தேத்தாவாடி கடற்கரையை அடைந்தோம். அங்கே மக்கள் உந்துருளிகள், ஈதுதுளிகள் மட்டும கையில் கிடைத்ததையும் எடுத்து கொண்டும் உணவின்றி பயணித்து மிகவும் களைப்படைந்த நிலையில் நின்று கொண்டிருந்ததை கண்டோம். அம் மக்களைக் காணும் போது தமிழர்களாகிய நாம் இடம் பெயர்வு வாழ்வு வாழவா பிறந்தோம் என எண்ணியவாறு என்னுடைய உறவுகளையும் கண்களால் தேடியவாறு பொக்கணை நோக்கி புறப்பட்டோம்.

பொக்கணைப்பகுதியை நெருங்க நெருங்க எறிகணைத்தாக்குதலும் இராணுவத்தினரின் கனரக ஆயுதங்களின் தாக்குதல்களும் கடுமையாகவிருந்தது. காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு போர் ஊர்திகள் முள்ளிவாய்க்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒருவாறு பொக்கணைப் பகுதியை சென்றடைந்தோம் அங்கே எம் உந்துருளிகளை மணல் பகுதியில் விட்டு விட்டு கடற்கரையால் நடந்தோம். அப்போ ஒருவருடைய இறந்த உடல் கடலலையில் அகப்பட்டு கரை வருவதும் கடலுக்குள் செல்வதுமாக இருந்தது.

நாம் கரையில் இருந்து குடியிருப்புக்கள் நோக்கி செல்லத் தொடங்கினோம். அப்போ கரையில் இருந்து 20m தூரத்தில் தறப்பாள் கொட்டகை தென்பட்டது. கடுமையான தாக்குதல் நடந்தது கொண்டு இருந்தது. இதனால் பாதுகாப்பு தேடி தறப்பாள் கொட்டகைக்குள் பதுங்குழி ஏதும் இருக்கும் என நினைத்து சென்று திறந்து பார்த்த போது எறிகனை விழுந்து குடும்பமே இரத்தம் உறைந்த படி தூக்கத்தில் இருந்த நிலையில் தந்தை, தாய், மூன்று பிள்ளைகள். இறந்து கிடந்தனர். சம்பவம் காலையில் தான் நடந்திருக்க வேண்டும். உறைந்த இரத்தத்துடன் இறந்த குடும்பத்தைப் பார்த்தும் எம் இதயம் நொருங்கி போனது .

வலியின் நினைவுகளுடன்
தாரகம் இணையத்திற்காக அனலின்பன்