Take a fresh look at your lifestyle.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! இழுபறிக்கு தீர்வு

எனதினிய மக்களே!
இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முரண்பாடுகளின்றி உணர்வு பூர்வமாக சகல மக்களையும் ஒன்றிணைத்து நடாத்தப்பட வேண்டும் என்பதே எல்லோரதும் விருப்பமும் எதிர்பார்ப்பும்.

முரண்பட்ட எம்மவர், நிகழ்வின் தாற்பர்யம் உணர்ந்து ஒன்று சேர்ந்து உயிரிழந்தோருக்கு அஞ்சலியையும் உறவுகளை இழந்தோருக்கு தேறுதலையும் ஆறுதலையும் வழங்க முன்வந்துள்ளார்கள். இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் எங்கிருப்பினும் எமது இனத்துக்கு 2009ம் ஆண்டு மே மாதம் 18ந் திகதி ஏற்பட்ட பாரிய மனித அழிவை இவ்வருடமும் அதே நாளில் நினைவு கொள்ள முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். பின்வரும் நடவடிக்கைகளை எமது மக்களிடம் இருந்து நாம் எதிர் பார்க்கின்றோம்.

2018ம் ஆண்டு மே மாதம் 18ந் திகதி காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் முள்ளிவாய்க்காலில் ஏற்றப்பட இருக்கும் நேரத்தில் இறந்த எமது உறவுகளின் சார்பாக எம் மக்கள் எங்கிருப்பினும் இரண்டு நிமிட மௌனம் காக்கவும்.

அதே நேரத்தில் சமயத்தலங்களில் பூசைகளில் வழிபாடுகளில் எம் மக்கள் ஈடுபடலாம். அகாலமரணமடைந்த ஆத்மாக்கள் சாந்தி பெற பிரார்த்தனைகளில் ஈடுபடலாம்.
எமது வணிக சகோதர சகோதரிகள் அன்று மதியம் 12 மணி வரை தமது கடைகளை அடைத்து தமது உணர்வுகளையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதை நாம் வரவேற்கின்றோம்.

அன்றைய தினம் துக்க தினமாக அனுஷ்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கருத்தில் எடுத்து எமது அன்றைய நிகழ்வுகளில் ஈடுபடுவது பொருத்தமானது. பாடசாலைகளும் அலுவலகங்களும் இரண்டு நிமிட நேர மௌனாஞ்சலியை காலை 11.00 மணிக்கு நிகழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தனிப்பட்டவர்கள் கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து தமது துயரத்தை வெளிக்காட்டலாம்.
அன்றைய தினம் எமது தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முள்ளிவாய்க்காலுக்கு எம்மவரை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து காலை 7.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் வரை உந்துருளி வாகனப் பேரணி ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளார்கள். அவர்களும் காலை 11.00 மணி சுடர் ஏற்றும் நிகழ்வில் பங்கு கொள்வார்கள்.

அன்றைய தின நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு –

மக்கள் முள்ளிவாய்க்காலை தவறாமல் காலை 10.15 மணியளவில் வந்து சேர வேண்டும். மக்கள் அமர்ந்திருந்து இளைப்பாற வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து 6 பேரூந்துகளும் வவுனியாவில் இருந்து 4 பேரூந்துகளும் மன்னாரில் இருந்து 5 பேரூந்துகளும் கிளிநொச்சியில் இருந்து 3 பேரூந்துகளும் முல்லைத்தீவில் இருந்து 10 பேரூந்துகளும் மக்களை ஏற்றி வந்து முள்ளிவாய்க்காலில் விடுவது மட்டுமன்றி நிகழ்ச்சி நிறைவின் பின்னர் திரும்பவும் அந்தந்த இடங்களுக்கு மக்களை ஏற்றிச் சென்று இறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எவ்வெந்த நேரங்களில் எங்கிருந்து மக்கள் பேரூந்துகளில் ஏறலாம் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் போன்ற விபரங்கள் நாளை தரப்படுவன.

சுடரேற்றும் நேரம் சரியாக காலை 11.00 மணியாகும். 10.30 மணிக்கு முன்னர் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் யாவரும் ஒதுக்கப்பட்ட தத்தமது இருக்கைகளில் வந்து அமர்ந்து கொள்ள வேண்டும்.

உறவுகளைப் பறிகொடுத்த வயது முதிர்ந்த ஒரு தாயாரிடம் சுடரை முதலமைச்சர் முதலில் கையளிக்க அதனை அவர் ஏற்று மத்திய சுடரை ஏற்றுவார். அவர் ஏற்றி முடிந்ததும் ஏனைய சுடர்களை பொது மக்கள் ஏற்றுவார்கள். ஏற்றிவிட்டு அதே இடத்தில் நின்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

சுடரேற்றல் தொடங்கும் போது பொருத்தமான நினைவு இசை எழுப்பப்படும். ஐந்து நிமிட நேரம் அப்போது மௌனம் கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தப்படும்.
நினைவு இசை நிறைவடைந்ததும் முதலமைச்சர் நினைவு நாள் உரை இடம்பெறும். உரை முடிந்ததும் நிகழ்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவன.

சகலரும் இந்த துயர நாளில் உணர்வுபூர்வமாக எமது இறந்த உறவுகளை மென்முறையோடும் சமயச் சார்புடனும் நினைவுபடுத்துவோமாக!

உறவுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவோமாக!
குறித்த நாளின் புனிதத்தன்மையை நினைவுபடுத்துவோமாக!

எவ்வாறு முரண்டு நின்ற எம் தமிழ் உறவுகள் முள்ளிவாய்க்காலின் தாற்பர்யம் உணர்ந்து தனித்துவம் உணர்ந்து தனிச் சிறப்புணர்ந்து ஒன்று சேர்ந்துள்ளார்களோ அதே போன்று இனிவரும் வருடங்களில் எமது இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு துன்பியல் நாளாக மே மாதம் 18ந் திகதியாகிய இந் நாள் பரிணமிக்க இப்பொழுதிருந்தே ஆவன செய்வோமாக!
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்