Take a fresh look at your lifestyle.

விடியும் வரை முடிவாகுமா முள்ளிவாய்க்கால்!

தமிழர் தாயகப் பரப்பையும் தமிழினத்தையும்,தமிழரின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளையும் முற்றுமுழுதாக அழித்துவிடும் நோக்குடன் பேரினவாத சிங்கள அரசும், உலகவல்லாதிக்கசக்திகளும் இணைந்து ஆக்கிரமிப்புயுத்த்தை கட்டவிழ்த்தனர்.

இந்த யுத்தம் மன்னாரில் தொடங்கி மணலாறுவரையும் போர் முனைகளாகபரந்து விரிந்து அகலக் கால் பதித்து,ஒவ்வொரு அடிமண்ணாக ஆக்கிரமிப்புபடைகள் விழுங்கிக் கொண்டன.

இடைவிடாத உக்கிர சமர்நடக்க,போராளிகளின் உயிர் தியாகங்கள் ,உணவின்றி,உறக்கம் தொலைத்து உறுதிகுலையாமல் இறுதிவரையும் சண்டை செய்து ஒவ்வொரு நிமிடமும் வீரச்சாவை அணைத்துக்கொண்டார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எத்தனையோபெரும் பெரும் முற்றுகைச் சமர்களைதன் மதிநுட்பத்தாலும் போராளிகளின் மனோதிடத்தாலும் முறியடித்துவென்ற வரலாறுகளை உலகம் அறிந்ததும் உண்மையே.

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்பாக தேசிய விழுமியங்களை கொண்ட தமிழினத்தையும் ,தமிழர் தாயகப் பரப்பையும் ,தமிழர் விடுதலை இயக்கத்தையும் துவம்சம் செய்யஆளும் வர்க்கம் திட்டமிட்டு இப்போரைநடத்தியது. இறுதியுத்தம். இந்தயுத்தம் உலகம் கண்டபோர்களைவிஞ்சும் அளவிற்கு,உலகம் கண்ட இன அழிப்பைவிஞ்சும் வகையில்அமைந்திருந்தது.

முள்ளிவாய்க்காலில் தமிழர் மீதுமாபெரும் இனப்படுகொலையை செய்து வெற்றித் திருவிழாகொண்டாடியது சிங்கள இனவாதம். போரின் கடைசி நாளை வெற்றிநாள் என்று நினைத்து அதனை அகிலம் அறியச் செய்தநாள்.

2009.05.18என்ற இந்தநாள்எஞ்சிப் போயிருக்கும் தமிழ் உறவுகள் நெஞ்சங்களில் அழியாத வடுச்சுமந்த நாளாக என்றும் நிலைத்திருக்கும் .

எனவேதான், இந்த கொடிய நினைவுகளில் கண்கள் சிந்தும் கண்ணீருடன் சொல்லதுடிக்கின்றேன்.

அன்று 2006 ம் ஆண்டு ஐப்பசி மாதம். நானும் எனது அப்பாவும் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது திடீரென்று வயல் காணிகளில் பெரும் வெடிச்சத்தங்கள்கேட்டன. பின்பக்கமாக இருந்து ஓடி வந்தவர்கள்,“ஆமி செல் அடிக்கிறான் ஓடுங்கோ… ” என்று கத்தி கூக்குரலிட்டபடி ஓடிவந்தனர்.நாங்களும் செய்வதறியாது கையில் அகப்பட்ட உடமைகளுடன் சொந்த ஊரான “ பூநகரியை” விட்டு மீண்டும் இடம் பெயர்ந்தோம்.

இடப் பெயர்வுகள் எமக்கெல்லாம் பழகிப் போன ஒன்று தான். மீண்டும் சொந்தஊரில் எல்லோரும் கால் பதிப்போம் என்ற நம்பிக்கை, ஆனாலும் எம் உறவுகளில் அரைவாசிப் பேரை இழந்துதான் மீண்டும் குடியேறுவோம்  என்பதையாரும் எண்ணியேபார்த்ததில்லை.

நடைபெற்றநிகழ்வுகள் எல்லாமுமேமுற்றிலும் மாறுபாடானதே . முந்தைய இடப்பெயர்வின் போது எம்மைவாழவைத்த “ஜெயபுரம்” என்னும் கிராமத்தில் குடியேறினோம். திக்கொன்றாய் திசையொன்றாய் சிதறுண்ட ஊர் உறவுகள் அங்குமீண்டும் ஒன்று கூடினோம்.

ஓர் ஊரில்நிரந்தரமாகதரித்துவாழ இயலாது.கல்விகற்க இயலாது,தொழில் புரிய இயலாது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் பலர் அப்போது தேசத்தின் கடமையை உணர்ந்து, கல்விக்குமுற்றுப் புள்ளிபோட்டுவிட்டு,தேசக் கடமையைதோளில் தாங்கியவர்களாக,தேசவிடுதலைப் போராட்டத்தில் போராளிகளாக தம்மைமாற்றிக் கொண்டனர். இச் சமயத்தில் தான் எனது அண்ணாவும் 2007 ம் ஆண்டு தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். எல்லா சூழ்நிலைகளிலும் எம்மை நாமேபழக்கப்படுத்தி கொண்டவர்கள் என்பதால் சுதாகரித்து வாழநிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டோம்.

ஆதலால் படிப்பை தொடர்வதற்காக மற்றைய சகோதரர்கள் கிளிநொச்சியில் தற்காலிகமாகவும்  நிலையில்லாத இடங்கலெல்லாம் வாழவேண்டியகட்டாயம் ஏற்பட்டது.

தமிழர்களுக்கு காலம் எழுதிய தீர்ப்போ என்னவோ தெரியவில்லை .அப்பாவும்,அம்மாவும் நானுமாக ஜெயபுரத்தில் இருந்து முக்கொம்பன் இடம் பெயர்ந்தோம். அங்கும் ஓரிருநாட்களே இருந்தோம். பின்னர் கிளிநொச்சி. எறிகணைத் தாக்குதல்களும், துப்பாக்கிசன்னங்களின் கீறல்களும் சும்மா இருக்கவிடவில்லை,ஓடினோம். வட்டக்கச்சிகிராமம் வரவேற்றுநின்றது. இடப்பெயர்வுக்குமுடிவே இல்லை என்பதால் தொடர்ந்துதர்மபுரம்,ஓரிருநாட்கள் மட்டும் தான் ஒவ்வொரு இடமும் சொந்தம்.

பின்னர் புதிய புதிய இடம்,புதிய உறவுகள்.நிலையில்லா வாழ்க்கை.மீண்டும் ஓடினோம்.”சுதந்திரபுரம்” என்றஊர் எம்மை அரவணைத்தது. இங்கு எங்கள் குடும்பஉறவுகள் தனித் தனியபிரிந்துகொண்டோம்.”தேவிபுரத்தில்”ஒன்று சேர்ந்தோம். பின்னர் “ இரணைப்பாலை ”கிராமம் ஓடிஓடி இனி எங்கே ஓடுவது என்னும் ஏக்கத்துடன் பித்துப் பிடித்தவர்களாக இளைப்பாறினோம்.

அன்று இரவு இரணைப்பாலை கிராமமே இருள் சூழ்ந்து அமைதியாகி இருந்தது.”அமைதிக்குப் பின் புயல்”என்பது யாவரும் அறிந்ததே .வேவுவிமானங்கள் இரவு பகலாக நோட்டமிட்டு அனைவரையும் பாதிக்கவைத்தது.

எறிகணைச் சத்தம் தூரத்தூரவாக கேட்டுக்கொண்டிருந்தது. அது நிலைக்கவில்லை . எங்கிருந்தோ வந்த எறிகணை கிட்டவாக வீழ்ந்து வெடித்து சிதறியதில் அமைதியேகுலைந்தது.

திடிரெனமுனகல் சத்தம் திரும்பிப் பார்த்தோம் அப்பா இரத்தவெள்ளத்தில் உயிருக்காகபோராடிக் கொண்டிருந்தார். அப்பா“பங்கருக்குபோங்கோ”எனசைகையால் காட்டினார் . எல்லோரையும் பங்கருக்குள் அனுப்பிவிட்டுஅண்ணாவும்,நானும் அப்பாவை அணைத்து காயத்திற்கு கட்டுப்போடமுற்பட்டோம். அனுபவம் எதுவும் இல்லை. காயமோவயிற்றின் முன் வாயிலாகசென்று முதுகு வழியாகவெளியேறிவிட்டது. வயிற்றைச் சுற்றிஅப்பாவின் போர்வையால் சுற்றிகட்டுப் போட்டோம். சதைத்துண்டங்கள் சிதறுண்டு இருந்தது.அள்ளிவைத்துகட்டினோம். பாடப் புத்தகத்தில் சிறுநீரகத்தை பார்த்த எமக்கு தந்தையின் சிறுநீரகத்தைகைகளால் அள்ளிஉடம்புக்குள் வைத்துகட்டும் நிலைஉருவாகியிருந்தது.


பதற்றம், பயம், அழுகை தந்தையை இழந்து விடுவோமே என்ற ஏக்கம், தாங்கமுடியாத வேதனையிலும் எங்களைப் பாதுகாக்கமுயற்சி செய்து கொண்டிருந்தோம் . “அப்பா”தனது வலியை வெளிக்காட்டாமலே அனுங்கிக் கொண்டிருந்தார். மருத்துவ முகாமிற்கு கூட கொண்டுசெல்லமுடியவில்லை .அருகிலும் இல்லை. எறிகணைத் தாக்குதல் ஓரளவு இடைவெளிகிடைத்தது. ஓடி ஓடி எல்லோரிடமும் உதவிகேட்டோம். உதவிசெய்யக்கூட முடியாதசூழ்நிலை . அவ்வேளையில் தான் போராளிகளின் வாகனம் வந்துநின்றது. அவர்களின் உதவியுடன் மருத்துவ முகாமிற்கு எனது அண்ணா கொண்டு சென்றார். நாங்கள் இரவுமுழுவதும் நித்திரை இல்லை. அப்பாவின் சுகசெய்திக்காககாத்திருந்தோம்.

அன்றுகாலையே இரணைப்பாலையையும் விட்டு வெளியேறினோம். முள்ளிவாய்க்காலில் ஓர் இடத்தில் இருந்தோம். வாகனச் சத்தம் கேட்டது, காத்திருந்த எமக்கு அதிர்ச்சியானதகவல்,  போர்வையால் சுற்றப்பட்டநிலையில் சடலம் இறக்குவதைக் கண்டோம். கண்கள் கட்டுப்பாடு இன்றிகண்ணீர் சொரிந்தன.

எங்கள் அப்பாஎங்களுடன் பகிடியாககதைக்கும் போதுசொல்லுவார் ,“நான் மண்டையைப் போட்டால் நீங்கள் ஒன்றும் செலவழிக்க தேவை இல்லை. ஏலுமென்றால் கால்மாட்டிலையும், தலை மாட்டிலையும்,கற்பூரம் கொழுத்திவைத்து விட்டு தேவாரம் பாடினால் போதும்”. என்று இறுதியாக அந்தவாக்குதான் நிஜமானது. குறிப்பிட்டசிலஉறவுகளுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் அப்பாவின் உடல் புதைக்கப்பட்டது. எங்களின் அப்பா 21.02.2009 அன்று எல்லோரையும் ஆறாத் துயரில் எம்மைஆழ்த்திசென்றுவிட்டார்.

எங்கள் துயரங்கள் நின்றுபோகவில்லை .என்னுடையஅண்ணாவும் இரணைப்பாலை எல்லை கடமையில் இருந்தபோது 18.04.2009 அன்று நடைபெற்ற தாக்குதலில் ( கப்டன் ரஜீவன்) வீரச்சாவைஅணைத்துக் கொண்டார். இழப்புக்குமேல் இழப்பு இழப்பதற்குஒன்றும் இல்லை.

“அனல் பட்டபுழுவாக துடித்தோம். இறுதியாக இன அழிப்பின் உச்சத்தை அரங்கேற்றிய அந்தநாள் 18.05.2009 அன்று முள்ளிவாய்க்காலேதஞ்சமென வாழ்ந்த எம் தமிழ் உறவுகள் அனைவரையும் சிறிலங்கா படையினரிடம் சரணாகதியடைய வைத்தது. இழப்பதற்கும், வாழ்வதற்கும் ஒன்றுமே இல்லைஎன்றதருணம்,வழியேதும் இல்லை,சரண்டைந்தோம். மீண்டும் முகாம் வாழ்க்கை,துன்பங்கள் , துயரங்கள். இன்றும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன . தமிழர்களாகியநாம் இழந்த உரிமையைமீட்கவேதுடிக்கின்றோம். எமக்கானதேசம் மீட்கவே ஆசை கொள்கின்றோம். இந்தநாளில்உலகநீதியாளர்களேஎம் இனத்தையும் திரும்பிப் பாருங்கள்எனக்கேட்டுநிற்கின்றோம்.

ஆக்கம் – யாகவி.