Take a fresh look at your lifestyle.

ஒரு பெண்ணின் வாக்குமூலம்!!! – அ.அபிராமி

இது வெறும் கதையல்ல ……….,உலகத்தின் அகக் கண்கள் எல்லாம் இறுக மூடிக்கிடக்க, இன அழிப்பு போர் அரங்கேறிக் கொண்டிருந்த அந்த இறுதி நாட்களில் நான் சந்தித்த ஒரு பெண்ணின் வலி நிறைந்த கதை…….

இப்போது அவள் இருக்கின்றாளா? இல்லை அரச பயங்கரவாதத்தின் இனவழிப்புக்கு இரையாகி விட்டாளா என்பது எனக்கு தெரியாது.

ஆனாலும் ,என் செவிப்புலனும், விழிப்புலனும் பதிவாக்கி என் மனத்திரையில் பத்திரமாய் பதியமிட்டிருக்கும் அந்த நாள் நினைவை மீட்டிப்பார்க்கிறேன்.

நண்பகல் 12 மணியை நெருங்கி விட்ட நேரம் ,எங்கும் மோட்டார் எறிகணைகள்,ஆர்.பி.ஜி செல்கள்,கனரக ஆயுதங்களில் இருந்து சீறிப்பாயும் ரவைகள் என தலைநிமிர்த்தி நட மாட முடியாத சூழல்…..எங்கும் புகைமண்டலமும் புழுதித் திரையுமாய் கந்தக நெடியும், பொஸ்பரசுகளின் எரிதணலுமாய்…உறவுகளைப் பறிகொடுத்த பிரிவுகளின் அவலமும் வலியுமாய்…..பசியும் களைப்பும் சோர்வுமென நடைபிணமாய் மக்கள் நடமாடிக்கொண்டிருந்த அந்தப் பொழுது……

வாசலில் ஏதோ நிழலாடிய உணர்வு நிமிர்ந்து பார்த்தேன்.ஒரு 25-28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்,வயிற்றில் 7,8 மாதக் கருவை அவள் சுமந்திருந்தாள்.இரத்தமின்றி வெளிறிப் போன அவள் முகமும்,பறட்டையாய் காய்ந்து வறண்ட தலைமுடியும், மிரட்சியோடு அலை பாய்ந்த அவள் விழிகளுக்குள் ஆழ்ந்து கிடந்த துயரமும் ,ஆங்காங்கே இரத்தச் சிதறல்களோடு அழுக்காகிக் கிடந்த அவள் ஆடையும் அவளின் நிலமையை அப்பட்டமாகச் சொல்லியது.

” அக்கா….அக்கா….. தண்ணீ……தண்ணீ ….அவளிடமிருந்து பேச்சு வரவில்லை .காற்றுத்தான் வெளியில் வந்தது.எந்த நேரத்திலும் அவள் விழுந்து விடுவாள் போன்று தடுமாறிக் கொண்டிருந்தாள்.

நானும் என்னுடன் இருந்த தோழியுமாய் அவளைத் தாங்கிப் பிடித்து இருத்தினோம்….
போத்தலில் வைத்திருந்த தண்ணீரை அவளுக்குக் குடிக்கக் கொடுத்தோம் .ஈரத்துணியால் அவள் முகத்தை துடைத்து விட்டோம்.

அவளிடம் கொஞ்சம் தெளிவு தெரிந்தது. ஏதாவது சாப்பிட்டீங்களா…? என்று அவளிடம் கேட்க முடியாத நிலையில் நாங்கள் இருந்தோம். நிச்சயமாக அவள் சாப்பிட்டு குறைந்தது இரண்டு ,மூன்று நாட்களாவது இருக்கும்.

எங்களிடமும் அவளுக்கு சாப்பிடக் கொடுக்க எதுவுமே இல்லை. காலையில் காளியம்மா வீதியில் இருந்த எங்கட சமையல் கூடத்தில் இருந்து கஞ்சி வாளியோட வெளியால வந்த போது கையில் பாத்திரத்தோடும், கண்களில் பசிக் களையோடும் பின் தொடர்ந்த சிறியவர்கள், பெரியவர்களைப் பார்த்த போது நெஞ்சை அடைத்தது துயர். எத்தனை பேரது பசியை என்னால் ஆற்றமுடியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இருந்த கஞ்சியை அவர்களிடம் பகிர்ந்தளித்து விட்டு வெறும் வாளியோடு நான் என் இருப்பிடம் திரும்பி இருந்தேன். பசியோடு காத்திருந்த தோழி அந்த வாளியில் ஒட்டியிருந்த ஒன்று இரண்டு சோற்றுப் பருக்களைப் பொறுக்கிச் சாப்பிட்டாள் . என்னை அறியாமலே விழியோரம் நீர் கசிந்தது.

அந்த வலியை விட வாசல் தேடி வந்து துவண்டு போய்க்கிடக்கும் அவளுக்குக் கொடுக்க எதுவுமே இல்லை என்பது பெரும் வேதனையைத் தந்தது.

“அக்கா…கொஞ்ச நேரம் இதில் இருந்துட்டுப் போகட்டா….” அவள் தயங்கித் தயங்கி கேட்டாள். ஆபத்தான இடம் என்று தெரிந்தும் அவளைத் தடுக்க மனம் இடம் தரவில்லை . பரவாயில்லை …….ஆனா வெளியில வேண்டாம், இந்தக்,காப்பகழிக்க இருங்கோ………
அவளது கையைப் பிடித்து பத்திரமாய்க் காப்பகழிக்குள் இறக்கினோம்.அவளது முகத்தில், பாதுகாப்பை உணர்ந்த திருப்தி தெரிந்தது.

எங்களது பாதுகாப்பகழி பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியாது, நாங்கள் மூவரும் குந்தியிருக்கக் கூடிய அகலமும் ஆழமும் ,சுற்றி 5,6 மண்மூட்டைகள் மேலே தரப்பால் கூரை என சிறியதொரு பாதுகாப்பரண் மட்டும் தான்.அதற்குள் கால்களை நீட்டி அவளை இருக்கச் செய்தோம். அவள் கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

அக்கா,அந்தப் பிள்ளையைப் பார்க்கப் பாவமா இருக்கு… பக்கத்துப் பாசறை அக்காக்களிட்ட சாப்பிட ஏதாவது இருக்குமா என்று பார்த்திட்டு வரட்டா…… இளைய தோழி கேட்டாள்.

அவளை அனுப்ப விருப்பம் இல்லைத்தான்…ஆனால் அவளும் பசி தாங்கமாட்டாள், அதை விட அடுத்த பாசறை கூப்பிடு தொலைவில் தான் இருந்தது. போன வேகத்திலேயே அவள் திரும்பி வந்தாள்.

அக்கா …அங்கேயும் சாப்பிட ஒண்டும் இல்ல….. ஆனா கொஞ்சம் சீனியும் தேயிலையும் இருக்கு…. அடுத்த நொடியே தேநீர் தயாரானது. பசிக்களையில் உறங்கிக்கொண்டிருக்கும் அவளை எழுப்பி தேநீரை கொடுத்தோம் . அவள் வேகமாக அதைக்குடித்து முடித்தாள். அவளது முகத்தில் சற்றுத் தெளிவு தெரிந்தது. மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தேன்.

”நீங்கள் யாரோட இருக்கிறீங்கள் …..உங்களை ஒருதரும் தேட மாட்டினமா…….”
“நான் தனிச்சிற்றன் அக்கா……எனக்கு இப்ப யாருமே இல்ல…….”
அவளது விழிகளில் கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது.

அதை எப்படிச் சொல்லுவன் அக்கா……மூங்கிலாற்றில் இருந்து சுதந்திரபுரத்துக்கு இடம் பெயர்ந்து வந்திருக்கேக்க என்ர கணவனையும் ஒன்றரை வயதுக்குழந்தையையும் பறிகொடுத்திட்டன். மல்லாவியில் இருந்து சுதந்திரபுரம் வரை “ஒரு கோழி பருந்துகளிட்ட இருந்து தன்ர குஞ்சுகளை எப்படிப் பாதுகாக்குமோ …… அப்படித்தான் எப்பவும் குழந்தையையும் என்னையும் பொத்திப் பொத்தி தன்ர சிறகுகளால் பாதுகாத்தவர் என்ர கணவர்“

நாங்கள் மல்லாவியில் இருந்து இடம்பெயர வெளிக்கிடேக்க உழவு இயந்திரம் பிடிச்சு எங்கட வீட்டுச் சாமானுகளையெல்லாம் ஓரளவு ஏத்தி வந்தனாங்கள். ஸ்கந்தபுரம்,கிளிநொச்சி,வட்டக்கச்சி ,தர்மபுரம் ,விசுவமடு வரை கொண்டு வந்தோம்.
கடைசியா கையில் இருந்த காசும் கரைந்து போயிற்று ,ஏற்றிக்கொண்டு வரமுடியாத சூழல் வேறு. கையில எம்பிட்டதுகளோட பிள்ளைக்குத் தேவையான சாமானுகளைத் தூக்கீன்ரு மூங்கிலாறு வரை வந்தம். அங்கேயும் கனநாள் இருக்கேல்ல…. இராணுவ வல்வளைப்பு மிக நெருங்கியதால் இரவோடு இரவாக அந்த இடத்தையும் விட்டு வெளியேற வேண்டிய சூழல்…….

வீதியெங்கும் மக்கள் வெள்ளம், இடையிடையே நகர முடியாமல் இறுகிப்போய் நின்ற வாகனங்கள் ,அதற்கிடையில் எதிரியின் எறிகணைப்போர் தலைவிரித்துத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரத்த வெள்ளத்தில் உறவுகளின் சாவுகள் , விழுப்புண்களின் வலிகள், கூடியிருந்த உறவுகளின் கதறல்கள்…….

யாருக்கு எப்போது, என்ன நடக்கும் என்று புரியாத சாவின் அச்சம் எல்லோர் மனங்களையும் நிறைந்திருந்தது .5,10 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை ஒரு இரவுப் பொழுது கடந்து வந்தோம் .

சுதந்திரபுரத்தை நாங்கள் அடைந்த பொழுது கிழக்கு வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. அறிந்தவர்,தெரிந்தவர் சொந்த பந்தம் என்று எந்தத் தொடர்பு மற்ற முகங்களாக இருந்தாலும் தமிழன் என்ற உணர்வோடும் உறவோடும் ஒவ்வொரு வீடுகள்,வெறும் காணிகள் எல்லாம் பலபேர் வாழும் கூடாரங்களாயின. எல்லா வீட்டு வாசல்களுமே உறவுகளுக்காய் திறந்திருந்தன.

ஒரு வீட்டுக்குச் சென்று இங்க ஒரு இடத்தில் நாங்க தங்கட்டுமா என்று கேட்டோம்.ஏற்கனவே அந்த வீட்டுக்காணிக்குள் பல பேர் தங்கியிருந்தார்கள். எங்களிடம் இருந்த தரப்பால் மூங்கிலாற்றோடு விடுபட்டு விட்டது.

கையில் குழந்தையோடு,தரப்பால் கூடாரம் போடக்கூடிய வசதி இன்றி வெறும் கையோடு நின்ற எங்களைப் பார்த்த அந்த வீட்டுக்கார அம்மா “ பரவாயில்லை தம்பி……. எங்கட வீடு கொஞ்சம் நெருக்கடி தான் சமாளியுங்கோ……ஆனா பாதுகாப்பு அகழிய மட்டும் வெட்டிப்போட்டு இருங்கோ …… இந்த எறிகணைகளையும், வான் தாக்குதல்களையும் சமாளிக்கின்ற சக்தி இந்த வீட்டுக்கு இல்லத் தம்பி……”
புன்னகை மாறாது பேசிய அந்த அம்மா அப்போது கடவுளாகத் தெரிந்தார்.

இருக்க இடம் கிடைத்த மகிழ்ச்சி ஒரு சில மணித் துளிகள் கூட எனக்கு நீடிக்கவில்லை .தொடர் எறிகணைகள் அக்கம் பக்கம் எல்லாம் விழத் தொடங்கியது.

வழமை போலவே குழந்தையை தன் மார்போடு அணைத்த படி என்னையும் படுக்க வைத்து அரணாக கணவன் பாதுகாக்க …….மனம் முழுவதும் கடவுளே காப்பாற்று…….காப்பாற்று….என வேண்டி நிற்க சில நொடிகள் கரைந்தது.

களீர் என்ற சத்தம் இடியாய் இறங்க உடலெங்கும் பிசு பிசுப்பு…… கண்களைத் திறந்தேன் எல்லாம் புகைமண்டலமாய்த் தெரிய என் கணவனும் குழந்தையும் இரத்த வெள்ளத்தில் சிதறுண்டு கிடந்தார்கள்.தொண்டை வரை இறுக்கிய துயரால் அதிர்ந்து போய் இருந்தேன். கதறியழ வார்த்தைகள் வரவில்லை .கண்ணீரைக் கூட கண்கள் மறந்தது.
நான் என் உணர்வுகளோடு போரிட்டு மெல்ல மெல்ல நடப்புக்குத் திரும்ப முயற்சி செய்து கொண்டிருந்தேன் . என்னால் முடியவில்லை .

சிதறுண்டு கிடந்த அவர்களை அணைத்த படியே என் நினைவுகளும் மெல்ல மெல்ல அடங்கிப் போனது.

எனக்கு நினைவு திரும்பிய போது வள்ளிபுனம் பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவ மனையில் நானிருந்தேன். எப்படி நான் பிழைத்தேன். என்ர குழந்தை …….என்ர கணவன்………நான் கண்ட காட்சி ….விழியருவி திறந்தது. கடவுளே! எந்தப் பெண்ணுக்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது.

என்னை அறியாமலே எனது கை வயிற்றைத் தடவிப் பார்த்தது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். எழ முயற்சித்தேன் முடியவில்லை .காலில் பெரிய கட்டுப் போட்டிருந்தது. உடலெங்கும் ஆங்காங்கே சின்னச் சின்ன விழுப்புண்கள். என்னில் தெரிந்த அசைவைக் கண்டு ஒரு மருத்துவப் போராளி தான் ஓடி வந்தாள்.

அக்கா …..கையில் ஆட்டாதீங்கா “றிப்” ஏறுது என்று சொன்னாள்.

“தங்கச்சி நான் போகவேணும்….. என்ர பிள்ள…..என்ர கணவன்….தனிய விட்டிட்டு வந்திட்டன்… எப்படியாவது என்ன வெளியே விடுங்கோ……. நான் அவர்களைப் பார்க்க வேணும்……அநாதரவாக அவர்களை விட்டிட்டு வந்திட்டன்……..அவர்களைத் தூக்கி புதைக்கக் கூட இல்லை……என்ன விடுங்கோ தங்கச்சி……”
அவளுக்கு என் இழப்பின் வலியும் ,ஏக்கமும்,தவிப்பும் நன்றாகவே புரிந்தது.ஆனால் என்னால் இப்போது எழுந்து நடமாட முடியாது என்பதும் என்னை விட அவளுக்கு நன்றாகவே தெரியும்.

அந்த மருத்துவ போராளி அக்கா இப்ப உங்களால் எழுந்து நிற்கக்கூட முடியாது….உங்கட வேதனையும் தவிப்பும் எனக்கு புரியுது…..எப்படியாவது அவர்களைப் பற்றி விசாரிச்சுச் சொல்கிறேன்……எனக்கு ஆறுதல் சொல்லி தேற்றினாள்.

“நான் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறேன் “ என்ற கேள்வி மட்டும் என் மனது முழுக்க நிறைந்திருந்தது .வயிற்றில் வளரும் குழந்தையிடம் அசைவு தெரிந்தது. ஒரு கணம் மேனியெங்கும் மெய் சிலிர்த்தது. “ உனக்கு நானிருக்கிறேன் அம்மா”….. என்மன உணர்வுகளைப் புரிந்து எனக்குப் பதில் சொல்வது போல்…..இந்த உலகத்துக்கு நான் வர ஆசைப்படுகிறேன் அம்மா என்று என்னைக் கெஞ்சுவது போல்…..கவலைப்படாதே அம்மா உனக்குத் துணையா நான் இருக்கிறேன் என்பது போல…….அந்தக்கணம் என்னையே நான் மறந்தேன்.

நானும் வாழ்ந்தாக வேண்டும்…..,ஆனால் கையில் எதுவுமே இல்லை. அடுத்த வேளை உணவு,மாற்று உடுப்பு, தங்குமிடம் என எதிர்காலம் மிகப் பயங்கரமாக இருந்தது.
“ அக்கா அந்த மருத்துவ போராளி தான் வந்தாள் ,கூடவே காலையில் எங்களுக்கு இருக்க இடம் தந்த அந்த அம்மா…..அவரைக் கண்டதும் பெற்ற தாயைக் கண்ட உணர்வு பொங்கி வந்த கவலைகளையெல்லாம் கொட்டிக் கதறினேன். அந்த அம்மா என்னைத் தேற்றி ஆறுதல் சொன்னார்.

“ பிள்ளை…..குழந்தையையும் ,அவரையும் அடக்கம் செய்தாயிற்று……இது உங்கட இடத்தில கிடந்த பை பிள்ளை……., இந்தா இது குழந்தையின்ர கையில கிடந்த காப்புப்பிள்ளை, இது உன்ர கணவன்ர கையில் கிடந்த மோதிரம்…..தன் புடவைத் தலைப்பில் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த அந்தப் பொருட்களைத் தந்தார். யாரோ முன்பின் தெரியாத அந்த அம்மாவின் பொறுப்பும் நேர்மையும் என் மனதை உருக்கியது. அந்த அம்மாவின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.

“நான் வாறன் பிள்ள……எல்லா இடமும் ஒரே செல்லடியாத்தான் இருக்கு. எப்படியாவது இத உன்ர கையில் சேரப்;பிக்க வேண்டும் என்று தான் இவ்வளவு நேரமா நான் காத்திருந்தனான் போயிற்று வாறன் பிள்ள…….”
எந்த நேரம் என்ன நடக்கும் என்று புரியாத இந்தச் சூழலில் ,காத்திருந்து என் உடைமைகளைக் கையளித்துச் செல்லும் அந்த அம்மா இப்போதும் எனக்கு கடவுளாகத்தான் தெரிந்தார்.

அன்றைய இரவே என்னிடம் விபரம் பெற்று புலிகளின் குரல் வானொலி எனது கணவனினதும், குழந்தையினதும் சாவு விபரத்தை அறிவித்தது. செய்தி அறிந்து எனது கணவனின் தாய்,அவர்களது சகோதரர்கள் ஓடி வந்தார்கள்.

நாங்கள் காதலித்து திருமணம் செய்ததால் ஏற்பட்ட மனக் கசப்பில் விலகிப் போன சொந்தங்கள் முதல் தடவையாக ,அதுகும் எல்லாம் இழந்து வெறுமையாய் ஒடிந்து போய் நாதியற்று நிற்கும் நிலையில் என்னிடம் வந்தார்கள்.

எங்களிட்ட இருந்து அவனைப் பிரிச்சுக் கூட்டீன்டு போய் இப்ப பறிகொடுத்திட்டு நிக்கிறியே……… என்று யாராவது ஒரு சொல் சொல்லிவிட்டால் அதைத் தாங்கும் சக்தி என்னிடம் இல்லை. ஆனால் இழப்புக்கு நடுவிலும் மிக நிதானமாக இருந்தார்கள் . “ அவனில்லை எண்டா என்ன…. உனக்கு நாங்கள் இருக்கிறம்….. அவன் ஆசைப்பட்ட உன்னை எப்பவும் நாங்க கைவிட மாட்டோம் “…… என்னைத் தேற்றினார்கள். அவர்களின் அந்த ஆறுதல் வார்த்தை நான் வாழும் காலம் முழுவதும் போதுமானதாக இருந்தது.

பாதுகாப்பு வலயமாக இருந்த மருத்துவ மனை எறிகணைகளால் அதிர அரைகுறையாக மாறிய விழுப்புண்ணோடு, என் கணவனின் தாய் என்னைப் பொறுப்பெடுத்துக் கூட்டிச் சென்றார்.

வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல செயலிலும் அவர்கள் என்னை பத்திரமாய் பாதுகாத்தார்கள் .மாமியின் மற்றப் பிள்ளைகள் மாத்தளன் ,பொக்கனைப் பகுதி முற்றுகைக்குள் அகப்பட்டுக்கொள்ள மாமியும் நானும் வலைஞர்மடம் ,இரட்டை வாய்க்கால் ,முள்ளிவாய்க்கால் பிள்ளையார் கோவிலடி வரை வந்தோம் .
என்னை ஒரு காப்பகழிக்க இருத்திவிட்டு மாமி தான் ஓடியோடி எல்லா வேலையும் பாப்பா ..
“ பிள்ளையார் கோவிலடியில் கஞ்சி காச்சிகினம் பிள்ளை….நீ இதில பத்திரமா இரு ……எப்படியும் இண்டைக்கு கஞ்சியோட தான் வருவன்.,” ஒரு சட்டியைத் தூக்கி கொண்டு போன மாமி திரும்ப வரவே இல்லை.

கோயிலடியெங்கும் எறிகணைகள் விழத் தொடங்கியது.குழந்தைகள் பெரியவர்கள் என கஞ்சிக்கு வரிசை கட்டி நின்றவர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். மாமியும் வருவா வருவா என எதிர்பார்த்துக் களைத்துப்போன நான் நடப்பது நடக்கட்டும் என்று மாமியைத் தேடிப் போனேன்.

வழியிலே மாமி விழுந்து கிடந்தார்….. அவரது உடலெங்கும் இரத்தச் சிதறல்களோடு கஞ்சியும் சிதறிக் கிடந்தது.
மாமி…..கதறினேன். அவரது உடலில் உயிர் இல்லை. மாமியை அந்த இடத்தில விட்டுவர என்னால் முடியவில்லை . மடியில் தூக்கி வைத்து அழுது கொண்டிருந்தேன் .
எனது நிலையைப் பார்த்த இயக்க அண்ணையாக்கள் மாமியை தூக்கிச் சென்று ஒரு இடத்தில புதைத்தார்கள்.
இப்போ ,நான் ஒரு தனிமரம் ,எங்க போறது, எங்க வாறது என்று எதுவுமே தெரியேல்ல…….கால் போன போக்கில் நடந்து வந்தன். அவள் தன் சோக கதையைச் சொல்லி முடித்தாள்.அவள் விழிகள் மட்டுமல்ல எங்கள் விழிகளும் நீர் கோர்த்தது.

“அக்கா… மெத்தப் பெரிய உபகாரம்……தேநீர் குடித்து ஒரு கிழமைக்கு மேல் இருக்கும்….” சொல்லிக் கொண்டே அவள் எழுந்தாள். “ நான் போயிற்று வாறனக்கா…….” அவள் புறப்பட்டாள்.
என்னிடம் அவளுக்கு கொடுப்பதற்கு எதுவுமே இல்லை. அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

தாரகம் இணையத்திற்க்காக

அ.அபிராமி