Take a fresh look at your lifestyle.

நினைவுகளில் நெருப்பாகும் முள்ளிவாய்க்கால்! – சிவசக்தி

இன்றைய நாள் இலங்கை அரசு தமிழ் இன மக்களின் மீது நடத்திமுடித்த போர்க்குற்றங்களின் நாளாகவும், தமிழர்களை முற்றாக அழித்தொழிக்கும் நோக்குடன் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை நாளாகவும், மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்த போரில் உயரிழந்தவர்களை நினைவுகூருகின்ற நாளாகவும்  உள்ளது.

இந்த நாளின் துயர் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் ஆறாத்துயரமாக அழியாத தழும்பாகப் பதிந்துள்ளது. உலகமனித இனத்துக்கே இழுக்கை ஏற்படுத்திய மிகப்பெரிய அவலமாக, மிகப்பெரிய  இனப்படுகொலையாக நிகழ்த்தப்பட்ட  இந்தப் பேரவலத்தை  தமிழ் மக்களாகிய நாங்கள் சந்தித்து, இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன.

மனித உரிமைகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை ஐக்கிய நாடுகளின் அவை சட்டமாக விதித்துள்ளபோதும், இந்த அவலம் உலகில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகவே காணப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசபடைகள் நடத்தியவை இனப்படுகொலைதான் என்பதை ஆதாரபூர்வமாக உறுதிசெய்த பின்னரும் உலகம் வாய்மூடிக்கிடக்கிறது. ஏனெனில், உலக வல்லரசுகளின் முழுமையான ஆசிகளுடனும் ஒத்துழைப்புடனும் தான் இலங்கை அரசால் இது நிகழ்த்தப்பட்டது என்பதை எல்லோரும் அறிவார்கள். தமிழினம் இனிமேல் எக்காலத்திலும் தமது உரிமைகளை நிலைநாட்ட முனையக்கூடாது என்பதை கற்பிக்கும் முகமாகவே இந்த இனஅழிப்புத் தாக்குதல்கள்மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டங்களில் எழுச்சிகொண்ட, தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க இலங்கை அரசு முனைந்த போதும், தனித்த அரசால் அது முடியாமற் போனது. இந்நிலையில் தான் பல கூட்டு இராணுவ உதவிகளுடன் இந்தப் போரை தமிழ்மக்கள் மீது ஏவியது இலங்கை அரசு. இது நன்கு திட்டமிடப்பட்ட இனஅழிப்பே தான் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும்.

மக்கள் பலம் என்கின்ற ஒன்று உள்ளவரை இந்த விடுதலைப் போராட்டத்தை நசுக்க முடியாது எனச் சரியாகப் புரிந்து கொண்ட இலங்கை அரசு,  தமிழ் மக்களை போராளிகளிடமிருந்து பிரித்துவிடவேண்டும் என நினைத்தது. அதனடிப்படையில் தன்னுடைய கைக்கூலிகளின் உறுதுணையுடன் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

தமிழ்மக்களின் வாழ்விடங்கள் குருதிச்சேறாகின. ஒவ்வொரு மனித உடலும் எண்ணற்ற குண்டுகளால் துளைக்கப்பட்டன. உணவின்றி, மருந்தின்றி உயிரிழந்த அவலம் நடந்தேறியது. உடலுறுப்புகள் சிதைந்தநிலையில் தமிழரின் உடல்கள் வகைதொகையின்றிக் கிடந்ததை செய்மதிப் படங்களுடாக உலகம் பார்த்தது.

போரை நிறுத்துமாறு விடப்பட்ட வேண்டுகைகளை இனவாத அரசு நிராகரித்தது. இந்த அவலங்கள் மீளமுடியாதவையாகவும் உயிருள்ளவரை மறக்கமுடியாதவையாகவும் உள்ளன. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வடிக்கும் கண்ணீர் கடலாகிக்கொண்டிருக்கிறது. முடிவற்றுத் தொடரும் துயரத்தில் மூழ்கிக்கிடக்கின்றது எம்மினம். மற்றவர்களின் துயரம்கண்டு பொறுக்கமுடியாமற் போராடியவர்களின் நிலை மிகவும் துயரளிப்பதாக உள்ளது.

அதுமட்டுமன்றி இனஅழிப்பிற்கான முழுமையான கைதேர்ந்த செயற்றிட்டத்துடனேயே மாவிலாற்றிலிருந்து  முள்ளிவாய்க்கால் வரை  முற்றுகையிட்டு வகைதொகையற்ற உயிர்க்கொலைகளினூடாக ஈழத்தமிழர்களின்  ஆயுதப்போராட்ட  வலுவை மௌனிக்கச் செய்தது.

முள்ளிவாய்க்காலில் தமிழினப்படுகொலையை அரங்கேற்றிய பின்    எஞ்சியுள்ள தமிழர்களையும் உளரீதியாகப் பலமிழக்கச்செய்யும் நடவடிக்கையில் சிங்களஇனவாதம்  தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது.  தமிழ் இனத்தவரின்; இன அடையாளங்களை அழிப்பதிலும், இளைய தலைமுறையை நன்கு திட்டமிட்டு சீரழியச் செய்வதிலும் சிங்கள இனவாதம்  இன்று முன்னிற்கிறது. இதன்காரணமாக தமிழர்களின் இளையதலைமுறை என்றுமில்லலாதவாறு சீர்கெட்டுள்ளது.

தாமும் உயர்ந்து தாய்நாட்டையும் உயர்த்தவேண்டிய இளையதலைமுறையினரின் சிந்தனைகள் செயலற்றுக்கிடக்கின்றன. போதைப்பொருட்பாவனையிலும், சந்திச் சண்டைகளிலும் இவர்களை நாட்டங்கொள்ளச் செய்யும் உத்திகள் மலிந்துவிட்டுள்ளன.

தமிழ்மக்கள் ஒன்றாகி விடக்கூடாது என்ற நோக்கத்துடன், ஆங்காங்கே பேரினவாதம் கொளுத்திவிடும் சூழ்ச்சிக்குண்டால் தமிழ்மக்களின் ஒற்றுமை வெடிப்புற்று நிற்கின்றது. இந்தச் சூழ்ச்சியை தமிழ்மக்கள் நன்குணர்ந்து கொள்ளவேண்டும். இத்தனை மோசமான இனஅழிப்பின்பின்னரும் நாங்கள் பிளவுபட்டு சிதறிக்கிடப்போமானால், அதுவே எமது இனத்துக்கு செய்யும் மாபெரும் தீங்காக அமையும்.

மாபெரும் இனஅழிப்பை நடத்தி முடித்தது மட்டுமன்றி, அதனை உலகின் கண்களில் இருந்து மறைத்துவிடும் கைங்கரியத்தையும் பேரினவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இனத்தின் விடியலுக்காக எழுந்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, தமது இன அழிப்புக்கு நியாயம் கற்பித்து வருகின்றனர்.

ஒருபுறம் தமிழர்களுக்குள் கருத்துமுரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்டு, மறுபுறத்தே பிளவுகளை ஏற்படுத்தி எமது இனத்தின் கலை, பண்பாட்டு விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைக்கின்றது சிங்களப்பேரினவாதம். தனித்தவமான கலையும் பண்பாடும் உயர்விழுமியங்களும் மிக்க எம்மினம் அழிந்துபோய்விடக்கூடாது.

முள்ளிவாய்க்கால் துயரங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.  எமது இனத்தை அழிக்க கங்கணம்கட்டிநிற்கும் பேரினவாதத்தின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடாது எமது பண்பாட்டையும் உயர்வையும் நாம் பேணவேண்டியவர்களாயிருக்கின்றோம்.

எண்ணற்ற ஈகங்களாலும், ஒப்புவிப்புகளாலும் கட்டிக்காக்கப்பட்ட எமது இனத்தின் விடுதலைவேண்டிய உணர்வை முன்னெடுத்து செல்பவர்களாகவும், எடுத்துக்காட்டானவர்களாகவும் வாழவேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு. போரின் பாதிப்புக்களுக்குள்ளான எமது உறவுகளை அரவணைக்கவேண்டியவர்களாகவும் உள்ளோம்.

இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவுநாளில், எமக்கு இழைக்கப்பட்ட அநீதியினை  உலகஅரங்கில் அம்பலப்படுத்துவதுடன், எமக்கான நீதியை வழங்குமாறு உலகநாடுகளை நிர்ப்பந்திப்போம். இதுவே உயிரிழந்த எமது உறவுகளுக்கான உண்மையான வணக்கமாக அமையும்.

 

 தாரகம் இணையத்திற்க்காக 

-சிவசக்தி –