Take a fresh look at your lifestyle.

களங்களில் முக்கியம் பெற்றிருக்கும் முகமாலையின் அதிர்வுகள்!- போர் முகம் தொடர் –11

கிழக்கு மூலையில் கதிரவன் இருளை விரட்ட எழுமுன் வடக்குமூலையில் செறிந்த பனிப்படலங்களைக் கிழித்தபடி எழுந்த வெடி அதிர்வுகள் காதைக்கிழித்துவிட துயில் விட்டு எழுந்து கொண்டோம்.

கதிரவனின் வரவு கண்டு புலரும் கிராமத்து மக்களின் பொழுது அன்று வட திசையின் ஆக்கிரமிப்புப் பேரதிர்வால் குறைப் பிரசவம் போல் விடிந்து கொண்டது. தமிழர் தேசத்தின் சரித்திரத்தைத்தட்டும் அனைவரின் மனத்திரைகளிலும் சட்டென்று வந்து புகுந்துவிடும் களங்களில் முக்கியம் பெற்றிருக்கும் முகமாலையின் அதிர்வுகள் வழமைக்கு மாறானது என்பதை உணர்ந்து கொண்டோம்.

போர்முகப் பயணத்திற்காக நாங்கள் சென்று கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து இது போராளிகள் எதிர்பார்த்துக் காத்திருந்த படைகளின் ஆக்கிரமிப்புப் படைநடவடிக்கை தான் என்பதை சந்தேகம் இன்றி உணர்ந்து கொண்டோம். வெடி அதிர்வுகள் காதுகளில் முட்டிக்கொள்ள ஒருபுறம் வேதனையாகவும் மறுபுறம் போராளிகளின் நீண்ட நாள் கவலை நிறைவேறிவிடுகிறது என்ற மகிழ்வும் மனங்களில் மாறிமாறிப் போரிட்டுக்கொண்டன.

களத்தில் போராளிகளுடன் நாங்கள் ஒன்றாகக் கூடி நின்ற ஒவ்வொரு சம்பவங்களிலும் போராளிகள் எங்களிடம் அண்ண சண்டையில்லாமல் இருக்கேலாமல் கிடக்குது. என்பதும் எப்பதான் அவனுக்கு அடிக்கச் சந்தர்ப்பம் வரப்போகுதோ?  என்றும் சொல்லிக்கொண்டிருந்த ஆழ மனப்பதிவு அவர்களின் முகங்களுடன் எங்கள் மனங்களில் வந்து வந்து போனது.

வெடி அதிர்வுகள் விரைவில் நின்றுவிடப் பெடியள் அடிச்சுக்கலைச்சிட்டாங்கள் போல  என்று உணர்வு சொல்லிக் கொண்டிருந்தது. மனதின் ஆதங்கம் அதிகமாகிவிடத் தொலைத்தொடர்புக் கருவியைநாடினோம். தொலைத்தொடர்பில் கலச்சிட்டம் என்றும் ஷஷகனக்க எடுத்துவைச்சிருக்கிறம்  என்றும் அந்தமாதிரித்தான்  என்றும் கள முனையின் சூடான தகவல்கள் காதுகளில் மோதிக்கொள்ள அந்தப் போராளிகளை விடவும் நாங்கள் மகிழ்ந்து கொண்டோம்.

மட்டற்ற மகிழ்வின் பின்னால் இருக்கின்;ற விலைகள் என்ன என்ற ஏக்கம் மனதை வாட்டிவிட எங்களின்ர பக்கம் என்ன மாதிரி என்றோம் தவிப்புடன். மதி வீரச்சாவு என்றார்கள். மதியா என்றோம்.

ஓம்.. ஓம்.. நீங்கள் கேட்கிற அவர்தான்  என்று பதில் வந்தது. கடந்த தடவை நாங்கள் போர்முகப் பயணமாய் முகமாலை முன்னிலைகளிற்குப் போயிருந்தோம். அப்போது கண்டல் பகுதிக் காப்பரண் ஒன்றில் கலகலப்பாய் இருந்த போராளிகளில் அரைக்காற் சட்டையுடன் நின்று  என்னட்ட இப்ப ஒண்டும் இல்லை அவனுக்கு அடிச்சுச் சாதிச்சுப்போட்டு உங்களுக்கு விசயம் தாறன் என்று சொல்லிய சிரித்த முகம் அவனுடையது.

இத்தனையுடன்  காயப்பட்டவர்கள் யார் யார்  என்றோம். சில பெயர்களை வாசித்தார்கள். களத்தில் எங்களுடன் அறிமுகமாகியவர்களின் பெயர்கள் அதிலும் வந்தன. இந்தச் சண்டை பற்றியும் இதில் போராளிகள் செயற்பட்ட விதங்கள் பற்றியும் அறிந்து விடவேண்டும் என்ற வேகத்தில் போர்முகப்பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியிருந்தோம். இப்படியிருக்க வட போர்முனையின் கட்டளைத்தளபதி கேணல் தீபன் அண்ண எங்களை அழைத்து பெடியள் உங்களை எதிர்பார்த்திருக்கிறாங்கள் என்றார்.

எப்பிடிச் சண்டை அண்ண என்றோம். அவர் சண்டை நடைபெற்ற பகுதிகளை விபரித்துக்கொண்டிருந்தார். நிலைமை பிரச்சினையில்லை பெடியள் அடிச்சுப் போட்டாங்கள் என்றார். பெடியள் எப்ப சந்தர்ப்பம் வரும் எண்டு பாத்துக்கொண்டிருந்தவங்கள் அண்ண என்று சொன்னோம்.

அவங்கள் நல்லாய்ச் செய்யிறாங்கள் என்றவர் போர்முகத்தைத்தான் இப்ப பாத்துக்கொண்டிருக்கிறாங்கள் எப்ப போறீங்கள் என்றவர் பெடியள் கனக்கவிசயங்கள் சேத்து வைச்சிருக்கிறாங்கள் நீங்கள் போனால் சரி என்றார்.

கட்டளைத்தளபதி கேணல் தீபன் அண்ணையுடன் களமுனை நிகழ்வுகள் பற்றிக் கதைத்துவிட்டு சாதித்து மகிழும் போராளிகளைச் சந்தித்துவிட முகமாலைக் களம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். தளபதி ஜெரி அவர்களின் கட்டளைப்பணியகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம்.

கட்டளைப் பணியகத்தை நெருங்கியதும் எதிரிகளின் கடுமையான எறிகணைத் தாக்குதல்களிற்குக் குறித்த பகுதி உள்ளாகியிருந்ததை வெளிப்படுத்துவது போல நிலத்தின் அமைப்பு இருந்தது. கலப்பை பூட்டி உழுது விட்டதைப் போல அந்தப்பகுதி முழுவதும் கிளறியெறியப்பட்டிருந்தது. களமுனைப் போராளிகளிற்கு மிகவும் அருகில் அமைந்திருந்த அந்த முகாமின் சூழவுள்ள பகுதிகள் அனைத்தும் எறிகணைகளால் சல்லடை போடப்பட்டிருந்தன.

ஒவ்வொரு தடயங்களையும் போராளி கண்ணாளன்  அது ஆட்டிலறி இது எயிற்றி வண் அது ஐஞ்சிஞ்சி  என்று ஒவ்வொரு எறிகணைகளின் தடங்களினையும் பார்த்து இனம் பிரித்துக் கூறிக்கொண்டிருந்தான்.

தளபதி ஜெரி அவர்களின் கட்டளைப் பணியகத்தை நெருங்குகின்ற போது எங்களிற்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எதிரியின் எறிகணைத் தாக்குதல்கள் அனைத்தையும் பிய்த்துச் சல்லடை போட்டிருந்தன. நிலத்தில் இருக்கின்ற பற்றைகள் சிறிய மரங்கள் அனைத்தையும் பிரட்டிப்பிழிந்து தள்ளியிருந்தன எதிரிக்கணைகள். முதல் தடவையாக நாங்கள் முகமாலை முன்னரங்கக் காவலரண்களிற்குச் சென்றிருந்த போது கூட இப்படியான ஒரு களச்சூழலை நாங்கள் சந்தித்திருக்கவில்லை. அவ்வளவிற்கு இந்தப்பிரதேசம் எதிரியின் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

தளபதி ஜெரி அவர்களின் கட்டளைப் பணியகத்தை நெருங்குகின்ற போது அங்கிருந்து எவ்வளவு விரைவாக முன்னரங்க நிலைகளிற்குச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் சென்று விட வேண்டும்
என்ற உணர்வே எங்களின் உள்மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஏனெனில் இதனைவிடக் களமுனையில் இருக்கின்ற போராளிகளின் முன்னரங்க நிலைகள் பாதுகாப்பானதாய் எமக்குத் தோன்றியிருந்தன.

இவற்றை எல்லாம் தாண்டித் தளபதி ஜெரி அவர்களின் கட்டளைப் பணியகத்திற்குள் செல்வதற்காக வளைவில் நாங்கள் சென்று திரும்பி எங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திக் கொண்டோம். அப்போது போராளி ஒருவன் எங்களருகில் ஓடிவந்து  அண்ண மோட்டச்சைக்கிளை அங்க இருக்கிற பொயின்ரில விடுங்கோ  என்று குற்றிகளால் மூடி அடைக்கப்பட்ட பகுதி ஒன்றைக் காட்டினான்.

களத்;தில் போராளிகளிற்கு மாத்திரமல்ல அவர்களின் அனைத்து உடைமைகளிற்கும் அவற்றுக்கெனப் பாதுகாப்பான அமைப்புக்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாங்களும் மோட்டார்சைக்கிளைக் காப்பரண் ஒன்றிற்குள் நிறுத்திவிட்டுத் தளபதி ஜெரி அவர்களின் இடத்திற்குச் சென்றோம். அவரின் காப்பரணிற்குள் கூடுதலானோர் இருப்பது போல எங்களிற்குத் தெரிந்தது. எங்களின் மோட்டார் சைக்கிளைப் பாதுகாப்பாக விடும்படி கூறுவதற்கு வந்திருந்த போராளியிடம்  என்ன சந்திப்பு ஏதும் நடக்குதோ என்றோம்.

அதற்கு  சீ… இல்லை  என்றவன் குறியீட்டுப் பெயர்களைக் கூறி  அவயள் தான் நிக்கினம் என்றான். அந்தப் போராளியுடன் கதைத்தபடி நாங்கள் செல்ல தளபதி ஜெரி அவர்கள் என்னமாதிரி வந்திட்டியள் என்ன  என்று தனது வழமையான சிரிப்புடன் எங்களை வரவேற்றுக் கொண்டார்.

முதல் முறை நாங்கள் வந்த நாங்கள் இப்ப பெடியள் வரவைச்சிட்டாங்கள்  என்று கூறியபடி அவரின் காப்பரணுக்குள் சென்றோம். அவ்வளவு தான் அந்தக் களமுனையின் பெரும்பாலான தளபதிகளும் அங்கிருந்தார்கள். அனைவரும் சிரித்தபடி இருங்கோ  என்று கதிரையை இழுத்துப் போட்டார்கள். எதிரியின் எறிகணை மழைக்குள் குளித்திருக்கும் அந்தக் கட்டளைப் பணியகத்தில்; தளபதி ஜெரி அவர்களும் ஏனைய தளபதிகளும் மிகவும் சாதாரணமாக அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

எறிகணை பதித்திருந்த பெரும் தடங்களையும் அதனைப் பொருட்படுத்தாது செயற்படும் போராளிகளையும் இணைத்துப் பார்த்துக் கொண்டு கதிரையில் அமர்ந்து கொண்டோம்.  எல்லாரும் இதில இருக்கிறியள் ஏதும் விசேசமோ?

என்று கதையைத் தொடர்ந்தோம்.  அப்பிடி விசேசம் ஒண்டும் இல்லை எல்லாரும் ஒவ்வொரு வேலையளா வந்த நாங்கள் இதில சந்திச்சிட்டம் அதுதான்  என்றார் கிளாலி களமுனைத்தளபதி குமணன்.

பெரிதாகக் கதைத்து விடாத அந்தத் தளபதியின் வாய் அசைந்தது ஆச்சரியத்தைத் தந்து கொண்டது. கறுத்த உயர்ந்த தோற்றத்தைக் கொண்ட அந்தத் தளபதி பச்சை இராணுவச் சீருடை அணிந்து இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் நின்றது இயல்பான மிடுக்கைத் தந்தது.  எப்பிடி இந்த முறை உங்களின்ர பக்கம் சண்டை  என்று கிளாலிக் களமுனைத்தளபதி குமணன் அவர்களிடம் கேட்டோம். சண்டைதான் என்பது போலத் தலையை ஆட்டிய அவர் மென்மையான சிரிப்புடன்  ஓம்… ஓம் எங்களின்ர பக்கம் ஒரு இடத்தால தான் பண்டுக்கு முன்னுக்கு வந்தவன் மற்ற இடங்களில கிட்டவரேல்ல பெடியள் அடிச்சுப்போட்டாங்கள் என்று அந்தப் பகுதியில் நின்று சண்டை பிடித்த போராளிகளின் திறமைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்.

 ஆமிய உடைச்சு உள்ளுக்கு வர பெடியள் விடேல்ல  என்றவாறு அடுத்த கதிரையில் இருந்த தளபதி ஜெரி அவர்களின் பக்கம் திரும்பி ஆளின்ர பக்கத்தில தான் சண்டை என்றார். தளபதி குமணன் அவர்களின் திசை திருப்பலுடன்  இந்த முறை பெடியள் நல்லாய்ச் செய்திருந்தாங்கள் என்று போராளிகளின் தீரம்மிக்க செயலை மகிழ்ச்சியாகச் சொல்லிமுடித்தார்.

நாங்கள் முதல் முறை லையினுக்கு வந்து போராளிகளைச் சந்தித்தபோது  ஆமிக்கு அடிச்சுப்போட்டுத்தான் உங்களோட கதைப்பம் என்று சொல்லி அனுப்பியது ஞாபகத்தில் வந்து போனது. சிரித்தபடி அதனை அவ்விடத்தில் கூறிக்கொண்டோம். என்று அவர்களிடம் கூறிக்கொண்டோம்.  இப்ப அவங்கள் அடிச்சுப்போட்டுத்தான் நிக்கிறாங்கள் என்றவர் மெதுவாக மீண்டும் சிரித்துக்கொண்டார். அவரின் சிரிப்பு போராளிகளின் வீரத்தை உணர்த்துவதாய் இருந்தது.
 

தொடரும்…..

தாரகம் இணையத்தில் இத் தொடரை தொடர்ந்து படிக்கலாம்

போர் முகம்-01

போர் முகம்-02

போர் முகம்-03

போர் முகம்-04

போர் முகம்-05

போர் முகம்-06

போர் முகம்-07

போர் முகம்-08

போர் முகம்-09

போர் முகம்-10