Take a fresh look at your lifestyle.

சம்பந்தன் என்ன செய்யப் போகிறார்?

இலங்கை அரசியல் சூழல்; மாற்றமடையக் கூடிய பதட்ட நிலைக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் சிங்கள அரசியலிலும் தமிழ் அரசியலிலுமே அதிகமாகத் தென்படத் தொடங்கியுள்ளது.

2015 இல் உருவான அரசியல் சூழல் இன்று இல்லை. 2015 இல் உருவாக்கப்பட்ட அரசியல் சூழல் என்பது இந்திய – அமெரிக்கச் சக்திகள் தமது கேந்திர நலன்களுக்காகவும் திறந்த பொருளாதார நலன்களுக்காகவும் உருவாக்கப்பட்ட சூழலே. அந்தச் சூழலை உருவாக்கியவர்கள் பெருந்தேசியவாதத்தை பெரிய அளவில் கணக்கெடுக்காமல் விட்டதே இன்றைய மாறும் சூழலுக்கு காரணம்.
இந்திய – அமெரிக்கச் சக்திகளின் பிரதான இலக்கு சீனாவிடமிருந்து கேந்திர நலனையும், திறந்த பொருளாதார நலனையும் பாதுகாப்பதே! இலங்கையின் கேந்திர இடம் என்பது இந்திய – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களுடன் தொடர்புபட்டது. ஹோர்முஸ், மலாக்கா நீரிணைகள் இணைக்கும் முக்கிய கப்பல் பாதையில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது.

சீனாவினுடைய பட்டுப் பாதை இலக்கில் முக்கிய இடமும் இலங்கை தான். சீனா தன்னுடைய பொருளாதார இராஜதந்திரத்தினூடாக இலங்கையில் நன்கு காலூன்றிவிட்டது. மகிந்தர் தனது ஆட்சிக்காலத்தில் அதற்கான எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டிருந்தார். மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம்இந்திய – அமெரிக்கச் சக்திகளுக்கு சார்பாக இருந்தபோதும் சீனாவின் செல்வாக்கினை ஒரு எல்லைக்கு மேல் குறைத்து விட முடியவில்லை.
இந்திய – அமெரிக்கச் சக்திகள் தங்களுடைய நலன்களுக்காகவே ஆட்சி மாற்றத்தினைக் கொண்டு வந்தன. அரசாங்கத்தையும் உருவாக்கின.

சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக மாற்றின. கூட்டமைப்பை அரசாங்கத்தின் பங்காளியாக்கியதன் மூலம் தமிழ் தேசிய அரசியலை கீழிறக்கம் செய்தன. தமிழ் மக்களின் அபிலாசைகளை சிறிதும் கூட கவனத்திலெடுக்காத அரசியல் தீர்வு முயற்சிகளை மேற்கொண்டன. தமிழ் மக்களை பெருந் தேசிய வாதத்தின் வாயில் கொண்டு போய் விடுகின்ற அனைத்து முயற்சிகளையும் செய்தன.
மகிந்தர் பெருந்தேசிய வாதத்தை தன் கையில் எடுத்து மிக நுணுக்கமான காய் நகர்த்தல்கள் மூலம் இந்திய – அமெரிக்க நிகழ்ச்சி நிரலை முழுமையாக குழப்பிவிட்டார். அவர் சிங்கள மக்களினால் நேசிக்கப்படுகின்ற பெருந்தேசிய காவல் மன்னனாக எழுச்சியடைந்து வருகிறார். தமிழ்த் தரப்பே தமது நிகழ்ச்சி நிரலை குழப்பி வருகின்றது என வழமையாக குற்றம் சாட்டும் இந்திய – மேற்குலக சக்திகள் இந்த தடவை வாயடைத்து நிற்கின்றன. இந்த தடவை அவர்களின் நிகழ்ச்சி நிரலை குழப்பியது பெருந்தேசிய வாதிகளே ஒழிய தமிழ் மக்களல்ல. சம்பந்தன் தமிழ் மக்களின் கோவணத்தையும் கழட்டிக் கொடுக்க தயாராக இருந்தார்.

மகிந்தர் காலத்தில் சீனா வலிமையான அத்திவாரத்தை இலங்கையில் உருவாக்கியதால் ரணில் – மைத்திரி கூட்டரசாங்கத்தினால் அந்த அத்திவாரத்தை அசைக்க முடியவில்லை. ஆரம்பத்தில் சில சலசலப்புக்களைக் காட்டினாலும் பின்னர் அரசாங்கம் சீனாவின் காலடியில் விழுந்து கிடந்தது. இது இந்திய – மேற்குலக சக்திகளுக்கு ஏற்பட்ட முதலாவது பெருந்தோல்வி. யார் ஆட்சிக்கு வந்தாலும் சீனாவின் செல்வாக்கினை அசைக்க முடியாது என்பதே இன்றைய யதார்த்தம். அது கடன் பொருளாதாரம் மூலமாக இலங்கைத் தீவைக் கட்டிப்போட்டுள்ளது. இந்திய – மேற்குலக சக்திகளுக்கு தற்போதுள்ள ஒரே ஆறுதல் தாங்கள் சுரண்டுவதற்கும் இலங்கைத் தீவின் கதவு திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதும் ரணில் தங்களுக்கு சார்பானவர் என்பது தான்.

பெருந்தேசிய வாதமே ஆட்சியில் இருப்பதனால் ரணிலின் சார்பு நிலை கூட எல்லைக்குட்பட்டதே! இந்திய – மேற்குலக சக்திகள் வலிந்து கோமா நிலையில் அரசாங்கத்தை வைத்திருக்கின்றன. இக் கோமா நிலையை தொடர்ச்சியாக இச் சக்திகளினால் பேண முடியாது என்பதே இன்றைய கள யதார்த்தம்.
இந்த அரசியல் சூழல் மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் மைத்திரியும் சம்பந்தனும் தான். மைத்திரி முழுமையாக தனிமைப்பட்டுள்ளார்.

அவருடைய தற்போதய அறிக்கைகள் செயற்பாடுகள் எல்லாம் தனிமைப்பட்ட வெப்பெரிச்சலின் விளைவுகளே! உயர் நிலையில் இருந்த நான் இவ்வாறாகி விட்டேன்என்ற புலம்பலும் அவரிடமிருந்து வருகிறது. தற்போது இறுதி முயற்சியாக பெருந்தேசியத் தளத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கப் படாத பாடு படுகின்றார்.

மறுபக்கத்தில் சம்பந்தன் தமிழ் அரசியல் தலைமையை விக்னேஸ்வரனிடம் இழந்து வருகிறார். தமிழ் மக்களின் அபிலாசைகளை விக்கினேஸ்வரனே வெளிப்படுத்தி வருவதால் அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது. சிறிய அரசியல் நிகழ்வுகளைக் கூட தமிழ் தேசிய நிலைநின்று விளக்கம் சொல்ல அவர் தவறுவதில்லை. இதைவிட கிழக்கில் தன்னெழுச்சியான அமைப்புக்கள் சுயமாக எழுச்சியடையத் தொடங்கியுள்ளன. கிழக்கைப் பாதுகாப்பதற்கான மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுப்பதில் சம்பந்தன் தலைமை தவறிவிட்டது என்பதே அவர்களது மிகப் பெரிய குற்றச் சாட்டு. கிழக்கு தமிழ் அரசியலை இளைஞர்கள் தங்கள் கைகளில் எடுக்கும் போக்கு வளர்ந்து வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டமைப்பின் பிடி அங்கு தளர்ந்து வருகின்றது.

2020 இல் மகிந்தரே ஆட்சிக்கு வருவார் என்பது ஏறத்தாழஉறுதியாகி விட்டது. மேற்குலக தாராளவாதம் பெருந்தேசிய நலன்களுக்கு உகந்ததல்ல என சிங்கள மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு கிட்லரை உருவாக்குவதற்கு கூட அவர்கள் தயாராக இருக்கினறனர். ஜனாதிபதி தேர்தல் முதலில் வந்தால் மகிந்தர் தனக்கென தலையாட்டிப் பொம்மை ஒன்றை ரஸ்யாவில் புட்டின் நிறுத்தியது போல வேட்பாளராக நிறுத்தக் கூடும். மகிந்தர் பிரதமராக பதவியேற்பார். நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தாலும் மகிந்தரே தன்னிடம் அதிகாரத்தை வைத்திருப்பார். பாராளுமன்றத் தேர்தல் முதலில் இடம் பெற்றால் அதில் வெற்றி பெற்றுப் பின்னர் அரசியல் யாப்பைத் திருத்தி ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சிப்பார்.

ஜனாதிபதி முறையை நீக்கம் செய்யவோ அல்லது அதிகாரங்களை குறைக்கும் வகையிலான திருத்தங்களைச் செய்யவோ அவர் ஒரு போதும் முனையப் போவதில்லை. ஒற்றையாட்சிக் கட்டமைப்பை இறுக்கமாகப் பேணுவதற்கும் அதன் வழி பெருந்தேசியவாத மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும் ஜனாதிபதி முறையே சிறந்தது என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தல் இடம் பெற்றால் மகிந்தரே தென் இலங்கையில் அதிக சபைகளைக் கைப்பற்றுவார். அவ்வாதரவு உள்;ராட்சி சபைத் தேர்தலை விட அதிகமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சிங்கள மக்களின் ஆதரவினை உறுதிப்படுத்திய நிலையில் மகிந்தர் ஏனைய இனங்களை நோக்கிக் கவனத்தை திருப்பியுள்ளார். ஏனைய இனங்களைப் பொறுத்த வரை அவரது முதல் இலக்கு முஸ்லீம்கள் தான். அதற்கான வேலைத்திட்டம் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அண்ணரும், தம்பியுமாக இரு இப்தார் நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளனர். அந்நிகழ்ச்சிகளுக்கு முஸ்லீம் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, முஸ்லீம் கல்விமான்கள், வர்த்தகர்கள், மதகுருமார் என்போரையும் அழைத்துள்ளனர்.

ஆளும் கட்சி அரசியலே தமது அரசியலாக வரித்துக் கொண்ட முஸ்லீம் தலைமைகளும் போட்டி போட்டுக் கொண்டு இணைவதற்கு தயாராக உள்ளன. ஆளும் கட்சி அரசியல் முஸ்லீம் மக்களின் அரசியல் கலாச்சாராமாகவும் இருப்பதனால் முஸ்லீம் மக்கள் பெரிய எதிர்ப்புக்;கள் எவற்றையும் காட்டப்போவதில்லை. இதனால் முஸ்லீம் தலைமைகள் சூழலுக்கேற்ப பேரம் பேசலை அதிகரித்துக் கொள்வார்கள் அல்லது குறைத்துக் கொள்வார்கள். இந்தத் தடவை மகிந்தர் பலமாக இருப்பதனால் பேரம் பேசலுக்குரிய வாய்ப்பு மிகக் குறைவு. சில அமைச்சுப் பதவிகளுடன் திருப்தி அடையக் கூடிய நிலையிலேயே அவை உள்ளன.

மலையகத்தில் ஆறுமுகம் தொண்டமான் மகிந்தரையே ஆதரிப்பார். அமைச்சுப் பதவிகள் இல்லாமல் அரசியல் நடாத்த அவர்களால் முடியாது. அதற்காக காத்திருக்கின்றனர். ஒரு சில அமைச்சுப்பதவிகளுடன் திருப்திப்பட்டு மகிந்தரை ஆதரிக்க முற்படுவர். டக்ளஸ் தேவானந்தாவும் கணிசமான தமிழ் வாக்குகளை மகிந்தவுக்குப் பெற்றுக் கொடுப்பார். அங்கையன் இராமநாதனும் மைத்திரியை கைவிட்டுவிட்டு மகிந்தருடன் சேருவார். சந்திரகுமாரும் சேரக்கூடும். இவையெல்லாம் இணைந்து கணிசமான தமிழ் வாக்குகளை மகிந்தருக்கு கொடுக்கும். தமிழ் வாக்குகளை மகிந்தர் போனஸ் வாக்குகளாகவே கணிப்பிடுவார். தனது வெற்றியைக் கணக்கிடும் போது இதில் தமிழ் வாக்குகளை அவர் சேர்ப்பதில்லை.

இது தான் இன்றைய அரசியல் சூழல். இந்திய – அமெரிக்க சக்திகள் இந்த புதிய அரசியல் சூழலை எப்படி எதிர் கொள்வது என்பதில் குழம்பிப் போய் உள்ளன. தமிழ்த் தரப்பைப் பலப்படுத்துவதைத் தவிர வேறு தெரிவு அவற்றிற்கு இல்லை. இலங்கைத் தீவை மையமாக வைத்த புவிசார் அரசியலில் தமிழ் மக்களின் முக்கியத்துவம் இதுதான். கஜேந்திரகுமார் அடிக்கடி கூறும் வாசகம் ஒன்று உண்டு. “இந்திய – அமெரிக்க சக்திகள்தங்களுக்கு தேவை என்றால் தமிழ் அரசியலை உயர்த்துவர். தேவையில்லையென்றால் இறக்குவர்.” நல்லாட்சிக் காலத்தில் இறக்க வேண்டிய தேவையிருந்தது இறக்கினர். இனி உயர்த்த வேண்டிய தேவை உள்ளது உயர்த்துவர். “நாங்கள் போராடுவதை தற்போது இந்திய – அமெரிக்க சக்திகள் ஊக்குவிக்கின்றனர்” என்ற சுமந்திரனின் கூற்றுக்கு பின்னால் உள்ள அரசியலும் இது தான்.

இப்பலப்படுத்தல் என்பது போராட்ட இலக்கையும், அதற்கான வேலைத் திட்டங்களையும், அமைப்புப் பொறிமுறையினையும் உருவாக்க முனைபவர்களினால்தான் முடியும். இவை மாத்திரமல்ல தமிழ் அமைப்புக்களை ஒரு குடையின் கீழ் ஐக்கியப்படுத்தவும் வேண்டும்.

இப்பணிகளை இணக்க அரசியலுக்கு தயார் செய்யப்பட்ட சம்பந்தனையும், சுமந்திரனையும் கொண்டு மேற்கொள்ள முடியாது. இதனால் இவர்களை சற்றுப் பின் தள்ளிவிட்டு விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் தமிழ்த் தரப்பை பலப்படுத்துவது பற்றி இச்சக்திகள் யோசிக்கின்றன. சம்பந்தனுக்கு இந்திய – அமெரிக்க சக்திகள் “விக்னேஸ்வரனை வெளியில் விட வேண்டாம் என நேரடியாகவே கூறியுள்ளன.”விக்னேஸ்வரனுக்கும் இத்தகவல் கூறப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

விக்னேஸ்வரனை தாம் நினைத்த மாதிரி கையாள முடியாது என்ற கவலை இச்சக்திகளுக்கு இருக்கிறது என்பது உண்மைதான். அரசியல் வாதிகளுக்கு இயல்பாகலே உள்ள சுத்துமாத்துப் பண்பு அவரிடம் இல்லை. இந்தியா என்றால் என்ன? அமெரிக்கா என்றால் என்ன? சிறீ லங்கா அரசு என்றால் என்ன? அவர் ஒன்றைத்தான் கூறுவார். இநதச் சக்திகளிடம் தங்pகயிருக்க வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை. தமிழ் மக்களின் சுயாதீனத்தையும், சுய மரியாதையையும் என்றைக்கும் அவர் விட்டுக் கொடுக்க மாட்டார். அறநெறி, ஆன்மீக வாழ்க்கையில் நம்பிக்கையுள்ள ஒருவரினால் இரட்டை வாழ்க்கையை வாழ முடியாது.

இந்திய – அமெரிக்க சக்திகளுக்கு விக்னேஸ்வரனை விட வேறு தெரிவு தற்போதைக்கு இல்லை. இச்சக்திகள் எப்போதும் எடுபிடிகளைத்தான் விரும்புமென்பது உண்மை தான். எடுபிடிகள் இல்லாத போதுதான் நண்பர்களைத் தேடுவர். எடுபிடி உறவுக்குள் சமத்துவம் இருக்காது. பரஸ்பர நலன்கள் இருக்காது. எஜமான் – அடிமை உறவுதான் இருக்கும். அந்த உறவுக்குள் ஒரு தேசிய இனத்தின் சுயாதீனத்தையோ சுயமரியாதையோ ஒரு போதும் பேண முடியாது. நட்புறவு அப்படியல்ல.அங்கு சமத்துவம் இருக்கும், பரஸ்பர நலன்கள் இருக்கும். பரஸ்பர மரியாதையும் இருக்கும். தாம் சார்ந்த இனத்தின் சுயாதீனத்தையும், சுயமரியாதையும் அங்கு பேண முடியும். இவற்றினூடாக பேரம் பேசும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

கஜேந்திர குமாரும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டாலும் விக்னேஸ்வரனுடனேயே நிற்கின்றனர். சித்தார்த்தன் தானும் கூட்டமைப்பை விட்டு வெளியேறி விக்னேஸ்வரனுடனேயே நிற்கப் போவதாக தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களிடம் கூறியிருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் அதிர்ப்திப் பிரிவும் அவருடனேயே நிற்கின்றது.

அமைப்புக்களுக்கிடையே முரண்பாடு இருந்தாலும் தன்னுடன் உடன்படிக்கைக்கு வருமாறு விக்னேஸ்வரன் இக்கட்சிகளைக் கேட்டிருக்கிறார்.
சம்பந்தன் தலைமைக்கு மூன்று வகை அழுத்தங்கள். ஒரு பக்கத்தில் இந்திய – அமெரிக்க சக்திகளின் அழுத்தங்கள். மறு பக்கத்தில் விக்னேஸ்வரனை வெளியில் விட்டால் தேர்தலில் பிரகாசிக்க முடியாது என்ற நிலை. இன்னோர் பக்கத்தில் கிழக்கில் மாறிவரும் அரசியல் போக்கு.

இந்த நிலையில் விக்னேஸ்வரனுடன் இணக்கத்திற்கு போவதைத்தவிர வேறு தெரிவு இல்லை. “நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் தனது பரிவாரங்களுடன் கலந்து கொண்டதுக்கு பின்னாலுள்ள அரசியலும் இதுதான்.

சம்பந்தன் தலைமை விக்னேஸ்வரனை மட்டும் கழட்டி எடுக்கும் காய் நகர்த்தலில் இறங்கியுள்ளது. விக்னேஸ்வரன் இதனை ஏற்கவில்லை. இலக்கு, கொள்கை,வேலைத்திட்டம், அமைப்புப் பொறிமுறை சீராக்கப்பட்டு உறுதியாக்கப்பட வேண்டும் என்று சமாதானம் பேச வந்தவர்களிடம் கூறியிருக்கிறார். இது சம்பந்தன் – சுமந்திரன் தலைமையின் இருப்புக்கு மட்டுமல்ல. தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கத்திற்கும் சவால் விடக் கூடியது.
இந்த அரசியல் சூழலில் சம்பந்தன் தலைமை என்ன செய்யப் போகின்றது.?
தற்போது எழுந்திருக்கும் பெரிய கேள்வி இதுதான்.