Take a fresh look at your lifestyle.

சேலம் சென்னை எட்டு வழிச்சாலை : லண்டனில் இந்திய தூதரகம் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலம் சென்னை எட்டு வழிச்சாலையை அமைக்க மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டு அதிமுக அரசும் முடிவு செய்துள்ளதை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்(Periyar Ambedkar Study Circle) தோழர்கள் ஒருங்கிணைக்க, தமிழ் தோழமை(Tamil Solidarity) அமைப்பும், அய்க்கிய ராச்சிய தமிழ் மக்கள்(Tamil People in UK) அமைப்பும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டம், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்னிலையில் நடைபெற்றது.

கனிம வளங்கள் மக்களின் பொதுச்சொத்து. ‘நிலம்’ மக்களின் பொருளாதார உரிமை.

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களை சேர்ந்த மக்கள், இந்த எட்டு வழி சாலை வருவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும், தங்களின் விவசாய நிலங்கள் பறிபோகிறது என்றும், எட்டு வழி சாலையை கடுமையாக எதிர்க்கிறார்கள். மக்களாட்சியில் மக்கள் கருத்துக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். மக்கள் வாக்கு செலுத்தியே மாநில மற்றும் மத்திய அரசாங்கம் உருப்பெறுகிறது. மக்களே அரசாங்கங்களின் அச்சு. அந்த மக்களின் கருத்துக்கே மதிப்பில்லை என்பது மக்களாட்சிக்கே விரோதமானது.

சேலத்தில் உள்ள மலைகளில் இரும்புத் தாது இருப்பதை எடுக்க ஆளும் அதிமுக அரசு, ஜிண்டால்(Jindal Steel & Power Ltd) எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனம் தமிழக மக்களின் பொதுச்சொத்தை கொள்ளை அடிக்க ஏதுவாக, அதாவது இரும்புத்தாதை எடுத்து செல்லவே இந்த எட்டு வழிசாலை அமைக்கப்படுகிறது என்பது புலப்படுகிறது. பொதுச்சொத்தை நாசப்படுத்தக் கூடாது சூறையாடக் கூடாது என்பது பொதுமக்களுக்கான ஒழுக்கம் மட்டும் அல்ல. அது பொதுமக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்திற்கும் பொருந்தும்.

மக்களின் பொதுச் சொத்தை சூறையாட வழிகோலுகிற, மக்கள் விரும்பாத, மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற, மக்களின் நிலத்தை பறிக்கிற, மக்களின் வரிப்பணத்தை பெற்று மக்களின் ஊழியராக இயங்கும் அரசாங்கம், கார்ப்பரேட் ஊழலுக்கு வழிவகுத்திடும் இந்த எட்டு வழிச் சாலை திட்டத்தை உடனடியாக கைவிடக் கோருகிறோம்.

மக்களாட்சியில் பேச்சுரிமை என்பது அடிப்படை. எட்டு வழிச்சாலை அமைக்க ஜனநாயக வழியில் இதுவரையில் போராடிய பல தோழர்களை கைது செய்த தமிழக அதிமுக அரசை வண்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யவும், அவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறவும் வலியுறுத்துகிறோம்.

அதே போல, இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரித்து வளர்ச்சிக்கு எதிராக செயல்படும், மத்திய பாஜக அரசையும், மாநில அதிமுக அரசையும், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்களையும் வண்மையாக கண்டிக்கிறோம்.
நன்றி
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்
லண்டன்

குறிப்பு:>