Take a fresh look at your lifestyle.

செய்தியும் பெரிது விடயமும் பெரிது வாசித்துப் பாருங்கள்!

 

ஶ்ரீலங்கா, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சில வங்கிகளிலிருந்து 1250 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மீளப்பெறப்பட்டு அலரிமாளிகை அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் சிலரின் பொறுப்பில் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வங்கி கணக்கு அறிக்கையை பெற்றுத் தருமாறு ஹற்றன் நஷனல் வங்கித் தலைவருக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிபதி ரங்க திஸாநாயக்க நேற்று (23) உத்தரவிட்டார்.

இந்த வங்கியின் கணக்கு அறிக்கையை கோருவதை நிராகரிக்குமாறு மேற்படி வங்கி விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பிலியந்தலையைச் சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே சரத் திஸாநாயக்க என்பவர் 2016.05.09 ஆம் திகதி பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

2014 டிசம்பர் காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதியின் செயலகப் பிரதானி காமினி செனரத் என்பவரால் அலரி மாளிகையிலிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி FAW வகையான 18 குறூகெப் வாகனங்கள் சுகத் ரொஹான் லொக்குமுதலி என்பவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு அவரின் மூலம் நடத்தப்பட்டு வந்த வர்த்தகத்தினூடாக இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு இருப்பதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 2015 ஜனாதிபதித் தேர்தலையடுத்து 18 கெப் வாகனங்களில் 17 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் ஜனாதிபதியின் செயலகப் பிரதானி காமினி செனரத் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட காசோலை ரொஹான் லொக்குமுதலியால் மாற்றப்பட்டு 20 கோடி ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இலங்கை வங்கியின் ஐந்து காசோலைகள் HSBC வங்கியின் நான்கு காசோலைகளும் கொமர்ஷல் வங்கியின் மூன்று காசோலைகளும் சம்பத் வங்கியின் நான்கு காசோலைகளும் ஹட்டன் நஷனல் வங்கியின் நான்கு காசோலைகளும் மக்கள் வங்கியின் ஐந்து காசோலைகளும் இவ்வாறு மாற்றப்பட்டிருப்பதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட மேற்படி காசோலைகள் மூலம் 1250 கோடி ரூபாவை ரொஹான் லொக்குமுதலிக்கு உரித்தான KJ 6434 இலக்கத்தையுடைய வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டு அலரிமாளிகையில் பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் துஷாரா என்பவர் அந்த இடத்திலிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட பணம் அலரிமாளிகையில் ஒப்படைக்கப்படாமல் அந்த பணத்தை முறைப்பாட்டாளர் ஊடாக சுகத் ரோஹண லொக்குமுதலியால் நடத்தப்பட்டு வந்த நிம்சர என்டர்பிரைசஸ் என்ற கணக்கிற்கு அன்றைய தினமே வைப்பிலிடப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.

2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலின் சில தினங்களுக்குப் பின்னர் ரொஹான் லொக்கு முதலி என்பவரின் ஆலோசனைக்கமைய அலரி மாளிகைக்குச் சென்று அங்கு நின்ற அமில என்ற பெயரையுடைய நபரூடாக போட்டோகொப்பி இயந்திரங்கள் இரண்டை பி. ஈ. 1134 என்ற இலக்கத்தையுடைய வானில் ஏற்றி லொக்கு முதலியால் நடத்தப்படும் கொஸ்வத்த பத்தரமுல்லையில் இயங்கும் பிரெஸ்கோ ரவல்ஸ் அன்ட் டுவர்ஸ் என்ற இடத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் புறம்பாக தலா 500 இலட்சத்தைக் கொண்ட இரண்டு காசோலைகள் காமினி செனரத், ரொஹான் லொக்கு முதலி ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2006 இலக்கம் 5 சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம், குற்றவியல் சட்டத்திற்கு அமைய 386 மற்றும் 389 என்ற விதிகளுக்கமைய குற்றமிழைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதியின் செயலகப் பிரதானி காமினி செனரத், சுகத் ரோஹண லொக்கு முதலி, ஏ.எம்.எம்.வி. அபேசிங்க, எம்.கே. தனுஷ்க லக்சான், கொலம்பஹேவகே துஷார, ஈ.கே. விஜேசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணங்கள் 2016.05.17 ஆம் திகதி நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ளது.

காசோலைகள் தொடர்பாக மேலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு புலனாய்வுப் பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதற்கமைய நீதிமன்ற உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கெடுக்கப்பட்ட போது, இந்த உத்தரவை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முற்றாக நிராகரித்த நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உரிய விதத்தில் ஒத்துழைக்குமாறு ஹட்டன் நஷனல் வங்கி தலைவருக்கு உத்தரவிட்டது.

இந்த இடத்தில் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவிக்கும் போது 82 காசோலைகள் மூலம் பலர் 1378 கோடி ரூபா பெற்றுக்கொண்டிருப்பதாகவும் இதன் பின்னணிகளை விசாரித்தறியுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருப்பதால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதன்போது, வங்கிக்கு இந்த தகவல்களை ஏன் பெற்றுக்கொடுக்க முடியாது என நீதவான் கேள்வி எழுப்பினார்.

இது சர்வதேச மட்டத்தில் நடத்தப்படும் ஒரு வங்கியென்பதால் வெளிநாட்டவர்களும் இதில் கொடுக்கல் வாங்கல் செய்கின்றனர்.

அவர்களுடைய இரகசியத் தன்மை பேணவேண்டியுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.

என்றாலும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி உரிய தகவல்களை உடனடியாக புலனாய்வுப் பிரிவுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஹட்டன் நஷனல் வங்கி தலைவருக்கு உத்தரவிட்டது.

குறிப்பு:>