Take a fresh look at your lifestyle.

ஐநா சபைக்கு நிதிப் பற்றாக்குறை ?

ஐநா சபை இதற்கு முன் இல்லாத வகையில் நிதிப் பற்றாக்குறை அபாயத்தில் இருப்பதால், நிதி வழங்காத நாடுகள் உரிய நேரத்தில் நிதி வழங்கி, தனது பணியை ஐ.நா தொடர வழிவகை செய்யுமாறு அண்டோனியோ கட்டரஸ் கூறியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்களது நிதிப் பங்களிப்புகளை இதுவரை வழங்காததே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப்போர் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலும், தீவிரவாதத்தால் நிலைகுலைந்துப் போய் கிடக்கும் நாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்கள் முகாமிட்டு கடமையாற்றி வருகின்றனர். இந்தப் படையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர். இந்தியாவின் சார்பில் மட்டும் 10 நாடுகளில் 7 ஆயிரத்து 798 அமைதிப்படையினர் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர வறுமையால் வாடும் சோமாலியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவது, உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால், பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களுக்கு முகாம்கள் அமைத்து தருவது போன்றவற்றை ஐ.நா செய்து வருகிறது. ஐ.நாவின் செயல்பாடுகளுக்கு அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் இணைந்து நிதி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நிதி சரிவர வழங்கப்படாததால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அளவு நிதி பற்றாக்குறை நடப்பு ஆண்டில் முன்னர் சந்தித்ததே இல்லை எனவும் ஐ.நா தலைவர் அண்டோனியோ கட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 112 உறுப்பு நாடுகள் தங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளன. கடந்த ஆண்டு இதுவரையான கால கட்டத்தில் 170 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உறுப்புநாடுகளிடம் இருந்து நிதி பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 149 கோடி டாலர்கள் மட்டுமே வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பிரேசில், எகிப்து, இஸ்ரேல், மாலத்தீவுகள், பாகிஸ்தான், சவூதி அரேபியா, செஷல்ஸ் சூடான் சிரியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 81 நாடுகள் இன்னும் தங்கள் நிதியை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நிதி வழங்காத நாடுகள் உரிய நேரத்தில் நிதி வழங்கி, தனது பணியை ஐ.நா தொடர வழிவகை செய்யுமாறு முறையிட்டுள்ளதாகவும், ஐ.நா தலைவர் அண்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பு:>