Take a fresh look at your lifestyle.

மகிந்தவை குற்றம் சாட்டும் ஶ்ரீலங்கா அரசு புலிகளைப் பற்றி கதைப்போரை பாதுகாக்கிறது- கம்மன்பில

வடமாகாண சபையின் செயற்பாடுகள் குறித்தோ அல்லது விஜயகலா மகேஸ்வரனின் செயற்பாடுகள் குறித்தோ இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. புலிகளை ஆதரித்துப் பேசினால் இந்த அரசு அவர்களைப் பாதுகாக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடமாகாண முதல்வர் அண்மைக்காலமாக முன்வைத்து வரும் கருத்துக்கள் அனைத்துமே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையிலேயே அமைந்துள்ளன. வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும், இராணுவம் எதை செய்வதானாலும் அது தனது அனுமதியுடன் மட்டுமே இடம்பெற வேண்டும் என்ற பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

இந்தநிலையில் திருட்டுத் தனமாக அரசியல் அமைப்பினை உருவாக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கபட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான ஆதரவும் இதன் பின்னணியில் உள்ளது. இவ்வாறான சூழலுக்கு மத்தியில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால், அதிகார பரவலாக்கல் இடம்பெற்றால்,தலைமை அமைச்சருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால், வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளை தடுக்க முடியாது. அவர்கள் மத்திய அரசின் கட்டுபாட்டை மீறி செயற்படும் நிலமை உருவாகும்.

இன்று இராணுவத்தை நேரடியாக எதிர்க்கும் வடக்கு, அதிகாரம் வழங்கப்பட்ட பின்னர் தமக்கென்ற படைகளை உருவாக்கி மத்திய அரசை முழுமையாக நிராகரிக்கும் நிலமை உருவாகிவிடும். எனினும் இந்தக் காரணிகள் அனைத்தையும் தெரிந்து கொண்ட இந்த அரசு வடக்கின் பிரிவினைவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்து வருகின்றது. ஒரு புறம் அரசில் இருந்துகொண்டு விஜயகலா மகேஸ்வரன் புலிகள் வேண்டும் என கூறுகின்றார். வடக்கு முதல்வர், தனி இராஜ்ஜியம் வேண்டும் என கூறுகின்றார். இவர்களைக் கட்டுபடுத்த தைரியம் இல்லாத அரசு வேடிக்கை பார்த்து வருகின்றது.

இந்த அரசு மகிந்த ராஜபக்சவையும் அவரைச் சார்ந்த நபர்களையும் மட்டுமே தண்டிக்க முயற்சித்து வருகின்றது. எமது தரப்பினர் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துகொண்டு சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் நடுநிலையான அரசு என்றால் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்து சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். தேசிய பாதுகாப்பை பங்கப்படுத்தும் விஜயகலா குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பு:>