Take a fresh look at your lifestyle.

தேரிழுத்த தேவமைந்தர்!- கவிதை

தேரிழுத்த தேவமைந்தர்!
***********-**************
சித்திரத்தேர் வடமிழுக்கச்
சிறுநரிகள் கூட்டமோ! – அட
புத்தரவர் பரவணிக்கும்
பக்தியிலே நாட்டமோ!!.

உத்தமியார் உடனிழுக்க
உருப்படிதான் காட்டுமோ!
பத்தினியா ரோடிழுக்கப்
பரவசம்தான் கூட்டுமோ!!.

சிங்களத்தார் சிரிப்பினிலே
சிங்காரிகள் விழுந்தாரோ!
வெங்களத்தில் விழுந்தவரை
மங்கையரேன் மறந்தாரோ!!.

பக்கம் நின்று பல்லிழித்தல்
பழக்கமெனக் கொண்டாரோ!
வெட்கமின்றி வீதிதனில்
விளக்கம்தர வந்தாரோ!!.

பட்டுச்சேலை பவளத்தோடு
பக்தி பெருகி வந்தாரோ!
தொட்டுத்தாவித் தோழரோடு
முக்தி உருகி நின்றாரோ!!.

கட்டுத்தேகக் காளையரோடு
கட்டித் தேரை இழுத்தாரோ!
விட்டுப்போன வாழ்வைமறந்து
கெட்டுப்போகத் துணிந்தாரோ!!.

ஊரார் கூடித் தேரிழுக்கின்
உதவார் சாதி என்றாரே!
உறவானில்லை என்றாலும்
அருகில் உருகி நின்றாரே!!.

பாடைகட்டி இழுத்தவரின்
பக்கத்தோடு சென்றாரே!
பல்லைக்காட்டி நடித்தவரின்
மிக்கத்துணையாய் நின்றாரே!!.

சொக்கத்தங்கம் போலவரை
சொந்தம் சொல்லிக்கொள்வாரோ!
வெட்கம்பொங்கும் போதினிலும்
வடத்தை இழுக்கச் சொல்வாரோ?.

ஆட்டி அடித்துக் கொன்றவரெங்கள்
ஆலயத்தேரை இழுப்பதுவோ!
மூட்டியெரித்துத் தின்றவரெங்கள்
மூளையந்தன்னை வெழுப்பதுவோ!!.

வேட்டிகட்டி வடத்தை இழுத்தல்
பண்டையத் தமிழர் பண்பாடு.
வேடிக்கையாகப் படைச்சீருடையே
வடத்தைப் பிடிக்குது அன்போடு.

ஊரையழித்தார் உறவாய் வந்தே
தேரையிழுத்துத் தெருவிலிட்டார்.
தேரையிழுக்கும் தோரணைகொண்டே
தெருவில் கூத்துக் காட்டிவைத்தார்.

தேவர்கூடித் தேரையிழுத்தார்
யாரிடம் சொல்லிச் சிரிப்பதுவோ!
ஆயர்பாடிப் பெண்டிரும்சேர்ந்தார்
யாரிடம் சொல்லி அழுவதுவோ!!.

ஆலயத்தேரை இழுத்தவர்தம்மை
அடியாரென்றே அழைப்பதுவோ!
ஆமிக்காரர் இழுத்தாரதனால்
அரசியலோடு இணைப்பதுவோ
– நன்றி –

வன்னியூர்- வரன்
28/07/2018

தொடர்பான செய்தி

இராணுவம் வெளியேறவேண்டும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் ஒருபுறம் போராடிக்கொண்டு, இன்னொரு புறம் இராணுவத்தைச் தேர் இழுக்க வைக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றது.

எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடினோமோ, அதே படையினரைப் பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும் என் பல்வேறு வழியில் சென்ற வலியுறுத்தி வந்தாலும் சில கோவில் நிர்வாகங்கள் இராணுவத்தினருக்கு முண்டுகொடுத்துவருகின்றனர்.

அந்த ரீதியில் தான் யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர்.