Take a fresh look at your lifestyle.

மாகாண சபையைப் பலவீனப்படுத்தும் தமிழரசு; பங்காளிக் கட்சிகள் சீற்றம்

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனைப் பலவீனப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு மாகாண சபையையே பலவீனமாக்கும் செயற்பாடுகளையே தமிழரசுக் கட்சி மேற்கொண்டு வருவதாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன.

இதனால் கூட்டமைப்பும் பல வீனமாவதை உணர்ந்து மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களைச் சீர்செய்து மாகாண சபையைச் சிறந்த முறையில் இயங்குவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்து ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்றும் அவை வலியுறுத்தியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றுக் கொழும்பில் நடைபெற்றபோதே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ அமைப்புக்கள் மேற்படி விடயங்களை கூட்டமைப்பின் தலைவரிடமும் தமிழரசுக் கட்சியின் தலைவரிடமும் முன்வைத்தன.

இந்தக் கூட்டத்தின்போது பல முடிவுகள் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படாமல் வழமை போன்று கூட்டம் நடந்து முடிந்ததாகப் பங்காளிக் கட்சியினர் தெரிவித்தனர். குறிப்பாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ பல கோரிக் கைகளை முன்வைத்த போதிலும் அதற்கான எந்த முடிவுகளும் கூட்டத்தில் எட்டப்படவில்லை எனக் கூறப்பட்டது.

இந்தக் கூட்டத்தின்போது அரசமைப்பு உருவாக்க விடயங்கள் மற்றும் கூட்டமைப்பின் பின்னடைவு, மாகாண சபையில் எழுந்திருக்கும் சிக்கல்கள் என்பன குறித்தே அதிகம் பேசப்பட்டுள்ளன. இதில் கடந்த உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் கூட் டமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளே வடக்கு மாகாண சபையில் நடைபெறுகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதிலும் மாகாண முதலமைச் சர் விக்கினேஸ்வரனைப் பலவீனப்படுத்தும் நோக்கில் தமிழரசுக் கட்சியினரே பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு முதலமைச்சரை பலவீனப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் அனைத்தும் கூட்டமைப்பையே பலவீனப்படுத்துகின்றன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென் றும் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தின.

ஆகவே மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள், சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. ஏற்கனவே பலவீனமடைந்திருக்கும் கூட் டமைப்பை இத்தகைய நிலைமைகள் மேலும் பலவீனப்படுத்துகின்றனவாக அமையக்கூடிய சூழல்கள் காணப்படுகின்றன. ஆகவே மாகாணசபை விடயத்தில் தமிழரசுக் கட்சி குழப்பங்கங்களையோ சிக்கல்களையோ தோற்றுவிக்காது செயற்படவேண்டும்.

தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்குச் சுமூகமான தீர்வைக் காண்பதுடன் மாகாண சபையையும் சிறந்த முறையில் செயற்படுத்தி எமது மக்களுடைய தேவைகள் பிரச்சனைளைத் தீர்ப்பதற்கு வழியை ஏற்படுத்த வேண் டும். எமது மக்கள் கூட்டமைப்பாகவே எம்மைப் பார்க்கின்றனர். கூட்டமைப்பின் முதலமைச்சராகவே விக்னேஸ்வரனும் இருக்கின்றார். ஆகவே, இந்தப் பிரச்சினைகள் தொடராது கூட்டமைப்பாக நாங்களே தீர்த்து வைக்க வேண்டும். அவ்வாறு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றும் பங்காளிக் கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.