Take a fresh look at your lifestyle.

சென்னை விமான நிலையம்: உச்சக்கட்ட பாதுகாப்பு

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் 72ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அரசு சார்பில் சுதந்திர தினவிழா நடைபெறும் இடங்களில், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் தீவிரமான கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார். இதேபோல, அந்தந்த மாநில தலைநகரங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுதந்திர தின விழாவைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் முக்கிய இடங்களில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணி முதல் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.