Take a fresh look at your lifestyle.

விக்கியுடன் சம்பந்தன் பேச வேண்டும்: ஒருங்கிணைப்புக் குழுவில் வலியுறுத்தல்

வடமாகாண சபையில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடி உட்பட, பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழுட்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கூட்டமைப்பு தற்போது முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன. இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு விடயத்தில் விரைவான செயற்பாடுகள் அவசியம் என்பதையும் பங்காளிக் கட்சிகள் இதன்போது வலியுறுத்தின. தீர்வு முயற்சிகள் தள்ளிப்போனால், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதையிட்டு கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டியிருக்கும் என்பதால், இவ்விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

வடாகாண சபை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், வழக்கு போன்ற விடயங்கள் தொடர்பாகவும், அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சந்தித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சு நடத்த வேண்டும் என இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார். கொழும்பில் பிரபல சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் இருவரும் சந்தித்துப் பேசியதை நினைவூட்டிய சிவாஜிலிங்கம், அதேபோல மீண்டும் இருவரும் சந்தித்துப் பேசுவதன் மூலம் நிலைமைகளை சுமூகமாக்க முடியும் எனச் சுட்டிக்காட்டினார். அதனையிட்டு பரிசீலனை செய்யலாம் என்ற வகையில் சம்பந்தன் பதிலளித்ததாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அதனைவிட, முக்கியமான விடயங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சி விரைவில் கூடி ஆராயவுள்ளதாகவும், அதனைவிட கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், அவற்றின் போது சர்ச்சைக்குரிய விடயங்கள் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் எனவும் சம்பந்தன் ஒருங்கணைப்புக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

அத்துடன் பங்காளிக் கட்சியான ரெலோ கோரிய தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டது. கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனமொன்றைத் தமது கட்சிக்கு வழங்குமாறு ரெலோ அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தமிழரசின் தலைவர் ஆகியோரிடம் கடந்த வாரம் முன்வைத்த கோரிக்கைக் குக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதில் வழங்கவேண்டுமென்று வலியுறுத்தியிருந்தது.

இதற்கமைய ய ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் சம்பந்தனிடம் கேட்டபோது, தமிழரசுக் கட்சியின் கூட்டத்தைக் கூட்ட இருப்பதாகவும், அந்தக் கூட்டத்தின் பின்னர் இதற்கான பதிலை வழங்குவதாகவும் கூறி னார்.

இதன் பின்னர் வ ட க் கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டு வரும் விடயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படும் நிலையில் பலரது பெயர்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியிலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஒரு குழப்பகரமான சூழ்நிலை காணப்படுகின்றது. ஆகவே, இது தொடர்பில் ஒருமுடிவைத் தமிழரசுக் கட்சி தெரியப்படுத்தவேண்டும். வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதைத் தமிழரசுக் கட்சி காலம் தாழ்த்தாது வெளிப்படுத்தவேண்டும் என பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன வேண்டுகோள் விடுத்துள்ளன. இது குறித்தும் ஆராயப்படும் என சம்பந்தன் தெரிவித்தார்.

குறிப்பு:>