Take a fresh look at your lifestyle.

நல்லூரில் நடைபெற்ற திலீபனின் நினைவு தினம்.!

தியாக தீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் வட தமிழீழம்  நல்லூரில் அமைந்துள்ள நினைவு தூபியில் நடைபெற்றன. ஏற்கனவே குறித்த தூபி இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உடைக்கப்பட்ட தூபி ஓரளவு சீர் செய்யப்பட்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.


முன்னதாக கரும்புலி ஒருவரின் சகோதரி பிரதான சுடரை ஏற்றி வைத்தார், தொடர்ந்து அவர் முதலாவது மாலையை திலீபனின் திருவுருவ படத்திற்கு அணிவித்து நினைவு அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து
வைத்திருந்தார்.

இந்த நினைவு நிகழ்வுகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மற்றும் பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசு கட்சி உறுப்பினருமான சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் போராளிகள் கட்சியை சார்ந்தோர் கலந்து
கொண்டிருந்தனர். மேலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

1987 ஆம் ஆண்டு செப்ரம்பர்   15 ஆம் திகதி இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை இன்றைய தினம் நல்லூரில் ஆரம்பித்திருந்தார். இன்றைய தினம்
ஆரம்பித்த உண்ணாவிரதம் எதிர்வரும் 26 ஆம் திகதி அவரது உயிரிழப்புடன் முடிவுற்றமை குறிப்பிடத்தகது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த 11 நாட்களும் குறித்த நினைவு தூபியில் காலை 9 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளதோடு, இறுதிநாளான 26 ஆம் திகதி மாபெரும் அஞ்சலி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.