Take a fresh look at your lifestyle.

மைத்திரியின் திட்டம் ஒரு அங்குலம் கூட நகர இடமளிக்க முடியாது: சுமந்திரன்

ஶ்ரீலங்கா படையினரின் போர்க் குற்றங்களிலிருந்து படையினரைப் பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா.வுக்கு புதிய யோசனை யொன்றை ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்தால் அதனை ஒரு அங்குலம் கூட முன்நகர இடமளிக்க மாட்டோமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடக பிரதானிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்தபோது, ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் புதிய யோசனை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், மற்றும் யுத்தத்துக்குப் பின்னரான நிலவரம் என்பவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவே இந்த யோசனைகளை தான் முன்வைக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்’டிருந்தார்.

இந்த மாதம் 25 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெறும் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவிருக்கின்றார். இதன்போதுதே இலங்கை மீதான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நிலைவரம் என்பவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான இலங்கை அரசின் புதிய யோசனையை சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?” என அதன் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர், “ஜனாதிபதி அவ்வாறான யோசனை ஒன்றை முன்வைத்தால் அதனை ஒரு அங்குலம் கூட நகர இடமளிக்க மாட்டோம்” என உறுதியாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியிருப்பதாவது:

“பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பதற்கு ஐ.நாவில் யோசனையொன்று சமர்ப்பிக்கப்படுமாயின் இது இலங்கை இணங்கி ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிய 30/1 34 /1 தீர்மானங்களுக்கு அரசாங்கம் மாறுபடுவதாக அமைந்துவிடும். இலங்கையின் இணை அனுசரணையுடனேயே அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

அது மாத்திரமன்றி யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வந்த சமயம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கும் இது மாறானது. இவ்வாறான நிலையில் முன்வைக்கப்படும் யோசனைக்கு பாரிய எதிர்ப்பினை வெளியிடுவோம் அத்துடன் அதனை ஒரு அங்குலம் கூட நகர இடமளிக்க மாட்டோம்” எனவும் சுமந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.