Take a fresh look at your lifestyle.

சிவசக்தி ஆனந்தனுக்கு ஶ்ரீலங்கா நாடாளுமன்றில் உரையாற்ற நேரம் ஒதுக்க முடியாது: கறாராக சொன்ன சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயற்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு சபையில் உரையாற்ற நேர ஒதுக்கீடு செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தார்.இதன்போது கருத்துரைத்த அவர், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், தமக்கு சபையில் உரையாற்ற நேரம் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய அவர் உரை ஒன்றை நிகழ்த்த முடியாது என்று குறிப்பிட்டார்.

தாம் தெரிவு செய்யப்பட்ட கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படுவதாக அவர் அறிவிப்பாராயின், அவருக்கு சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்கீடு செய்ய முடியும்.அதுவே சம்பிரதாயமாகும் என சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.

எனினும், இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடாக தெரிவான அவர், அதில் தொடர்ந்தும் நீடிப்பாராயின், கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டும்.இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டத்திட்டங்களை அவர் பின்பற்றாவிட்டால், அவருக்கான நேரத்தை ஒதுக்கீ செய்ய முடியாது என சுமந்திரன் தெரிவித்தார்.

இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில. கருத்துரைத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன,குறித்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இரண்டாவது முறையாக சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.தம்மைத் தெரிவுசெய்த மக்களின் சார்பில் தமது கருத்துக்களை முன்வைக்க குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தர்ப்பத்தைக் கோருகிறார் எனத் தெரிவித்தார்.

இதேநேரம், இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன,நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் சார்பில் தமது கருத்தை முன்வைப்பதற்கான உரிமையை சபாநாயகர்கள் வழங்கியமை வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, குறித்த சந்தர்ப்பத்தில் சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர், இந்த விடயத்தை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வொன்றை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

இதேநேரம், இதன்போது கருத்துரைத்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா, தங்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்த நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் மிக்க எந்த விடயத்தையும் பற்றி விவாதிப்பதற்கும் இடமில்லை.எனவே, ஒவ்வொரு கட்சிக்காக நேரத்தை ஒதுக்கீடு செய்வதைத் தவிர்த்து, நேர ஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா குறிப்பிட்டார்.

குறிப்பு:>