Take a fresh look at your lifestyle.

தமிழ் அரசியல் கைதிகளுக்காக வலுப்பெற்றுவரும் போராட்டங்கள்! மல்லாவியில் அணிதிரண்ட மக்கள்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறத்தி தமிழர் தாயகமெங்கும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது .யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நான்காவது நாளாக நடைபவனியினை மேற்கொண்டுவருகின்றனர் அதனை விட பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பிலும் அரசு உடன் பதில் வழங்க வேண்டி மல்லாவி அணிஞ்சியன்குளம் அ த க பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்

இந்த பேரணி மல்லாவி துணுக்காய் வீதிவழியாக மல்லாவி சிவன் ஆலயம்வரை நகர்ந்து நிறைவடைந்தது. அங்கு கண்டன உரைகள் இடம்பெற்றது அதனை தொடர்ந்து போராட்ட காரர்கள் சிலர் துணுக்காய் பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் ஜனாதிபதி அவர்களுக்கான மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்

சர்வதேசமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடு. நல்லாட்சி நம்பியிருக்கவில்லை போராடுவது தீர்வு. தமிழினம் தன்மானத்துடன் வாழ வேண்டும். நல்லாட்சி மக்கள் ஆட்சியல்ல. கோமாளி அரசு ஆபத்தில் தமிழினம். சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும்

விடுதலை செய் விடுதலை செய் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய். நல்லாட்சி அரசே நடிக்காதே நம் உறவுகளை தடுக்காதே. அபிவிருத்தி இருக்கட்டும் பிள்ளைகளின் அப்பாவை காட்டு. வாழவிடு அல்லது சாகடித்துவிடு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்தில் வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் குறிப்பாக இந்தப் பேரணியில் மல்லாவிப் பகுதியில் வர்த்தக நிலையங்களை நடத்தி வரும் முஸ்லிம் வர்த்தகர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.