Take a fresh look at your lifestyle.

நடக்க முடியாதவர்களாக கைதிகள்: நேரில் பார்த்த அனந்தி வேதனை

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சூழலில் நேற்று அவர்களைச் சந்தித்த அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில் –

உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. நடக்க முடியாதவர்களாகவும் செவிப்புலன் குறைந்துள்ளவர்களாகவும் அவர்கள் காணப்படுகின்றனர். கைத்தாங்கலாக வரக்கூடிய நிலையில் உள்ள 5 பேரை மாத்திரம் சந்தித்தேன்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அவ்வாறு விடுதலை செய்வதில் சிக்கல் நிலை காணப்படுமாயின் தங்களை மிகக் குறுகியகால புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைக்கின்றார்கள்.

இவ்வாறு மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தெளிவாக அரசியல் கைதிகள் பேசுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களது போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்கின்ற வகையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமையையும் நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.

அரசியல் கைதிகள் உணவின்றிச் சாவுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றபோது நாம் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகளாக அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இருந்து மாறவேண்டும்” என்றார்.