Take a fresh look at your lifestyle.

கைதிகள் விடுதலை: ஜனாதிபதியை வலியுறுத்திய கூட்டமைப்பு

நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு உடனடியாக அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை அறிவிக்க வேண்டும் ஶ்ரீ லங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கின்றது.

பாராளுமன்றத்துக்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாராளுமன்றத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக தான் அறிந்துவைத்திருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பாக சட்டமா அதிபருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுக்களின் விபரங்களையும் கேட்டறிந்தனர்.

“சட்டமா அதிபருடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இரண்டு கைதிகளை மட்டுமே விடுதலை செய்யக் கூடியதாக இருக்கும்” என்பதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், கைதிகளின் விடுதலை விடயத்தில் ஜனாதிபதி உடனடியாக அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுத்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தப் பிரச்சினை உடனடியாக அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என சம்பந்தனும் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 17 ஆம் திகதி தான் மீண்டும் பாராளுமன்றம் வருவதாகவும், அதன்போது இந்த விவகாரம் குறித்து விரிவான பேச்சுக்களை நடத்தலாம் எனவும் தெரிவித்தார். அதற்கு முன்னர் சட்டமா அதிபரை அழைத்து இது தொடர்பாக தான் பேசவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 17 ஆம் திகதி பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெறும் பேச்சுக்களுக்கும் சட்டமா அதிபரும் அழைக்கப்படுவார்.