Take a fresh look at your lifestyle.

தயாராகிவரும் கருணாநிதி சிலை: பார்த்தார் ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் அமைக்க தயாராகி வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை மீண்டும் பார்த்து ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

திமுகவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியின் 8 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை வடிவமைக்கும் பணி, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

சிற்பி தீனதயாளன் என்பவர் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அறிவாலயத்தில் வைக்கப்படும் கருணாநிதி சிலையின் மாதிரி வடிவத்தை சிற்பி தீனதயாளன் தயாரித்துள்ளார். சிலையின் மாதிரியைப் பார்வையிடவும், திருத்தம் ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டவும் திமுக தலைவர் ஸ்டாலின் சிற்பக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

கடந்த செப்.11 அன்று ஸ்டாலின் நேரில் சென்று சிலையைப் பார்வையிட்டார். பின்னர் முகத்தில் சில மாறுதல்கள் செய்யுமாறு சிற்பியிடம் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் இன்றும் ஸ்டாலின் சிலை செய்யும் இடத்துக்கு நேரில் சென்றார். சிலை தயாராகி வருவதை பார்வையிட்டார். இந்தச் சிலை கருணாநிதி மறைந்த நூறாவது நாளில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி சிலையை வடிக்கும் சிற்பி தீனதயாளன் இதற்கு முன்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலையையும், அன்பகத்தில் உள்ள கண்ணகி சிலை, முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.