Take a fresh look at your lifestyle.

எனது உயிருக்கு அச்சுறுத்தல்: காவலிலுள்ள இந்தியர் தோமஸ் முறைப்பாடு

ஶ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, இந்தியரான மெர்சலின் தோமஸ் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஆகியோரைப் படுகொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இந்தியரான, மெர்சலின் தோமஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கோட்டு நீதிவான் நீதிமன்றத்தில் சிறப்பு வாக்குமூலம் ஒன்றை வழங்கினார். அப்போது அவர்,குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை, எழுத்துமூலம் முறைப்பாட்டைத் தெரிவிக்குமாறு நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.

நீதிமன்ற அனுமதியுடன் சுமார் 3 மணித்தியாலங்களாக 20 பக்கங்களில் எழுதப்பட்ட இந்த வாக்குமூலம் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

என். தோமஸ் என்றழைக்கப்படுகின்ற குறித்த இந்தியப் பிரஜை தமது எழுத்துமூல விளக்கத்தை நீதிவானிடம் கையளித்ததையடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை அழைத்துச் செல்வதற்கு முன்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதன்போது நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தம்மை மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டாம் என குறித்த இந்தியப் பிரஜை இதன்போது கண்ணீர் மல்க நீதவானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய செயற்படுத்துவதற்கு நேரிடுவதாகத் தெரிவித்த நீதிமன்றம் இந்தியப் பிரஜையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தது. எனினும், தனது சகோதரரர் சிறந்த மனநிலையில் இல்லையென சந்தேகநபரின் சகோதரர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.