Take a fresh look at your lifestyle.

மத்திய அரசு முடிவால் தமிழகம் மக்கள் சோகம்.!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது,  தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் -கேரளா இடையிலான முல்லை பெரியாறு அணை பிரச்னை, நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்த அணை பலவீனமாகி விட்டதாகவும், இயற்கை சீற்றத்தால் அது உடைந்தால்  ஆயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனவும் கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் எனவும் கூறி  வருகிறது. அதே நேரம், அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு நடத்தி நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது. ஆனால், கேரள அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதுடன், அணையை பராமரிக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் மறுத்து வருகிறது. இதை எதிர்த்து உச்ச  நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருமேடு என்றஇடத்தில் புதிய அணை கட்ட அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பம் அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, கேரளாவுக்கு அனுமதி அளிக்கக்  கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதையும் மீறி புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்தும்படி கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று அதிரடியாக அனுமதி அளித்துள்ளது. இதற்கான  அதிகாரப்பூர்வ கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை, தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை திரும்பப் பெறும்படி மத்திய  அரசை தமிழக கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.