Take a fresh look at your lifestyle.

ஈரான் மீதான பொருளாதாரத் தடையில் இந்தியாவுக்கு விலக்கு .!

ஈரான் மீதான பொருளாதாரத் தடையில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளித்ததற்கு வெளியுறவுத்துறை அதிகாரி ரவீஸ்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமெரிக்கா முடிவை இந்தியா வரவேற்பதாகவும், பொருளாதாரத் தடையில் இருந்து அமெரிக்க அளித்த விலக்கு பற்றி ஆராய்ந்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கான மிகத் தீவிரமான பொருளாதார தடை அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 6 மாதத்தில் முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென இந்தியா, சீனாவுக்கு கெடு விடுத்துள்ளது.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதையும், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதையும் கண்டுபிடித்த அமெரிக்கா, கடந்த 2015ல் செய்து கொண்ட சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து சமீபத்தில் விலகியது. இதைத்தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டது. இந்த பொருளாதார தடை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையானது. ஈரான் வருவாய்க்கு முக்கிய ஆதாரமான எண்ணெய் ஏற்றுமதி, நிதிச் சேவைகள் இனி உலகின் எந்த இடத்திலும் செய்ய முடியாது. இதுதொடர்பாக ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீதும் அமெரிக்காவின் தடை பாயும்.

இதில், எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியா, சீனா, துருக்கி, ஈராக், இத்தாலி, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளும் படிப்படியாக எண்ணெய் இறக்குமதியை ஈரானிடமிருந்து விரைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஈரானின் நடவடிக்கைகள் மாறும் வரை இந்த தடைகள் அமலில் இருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் முதலிடத்தில் சீனாவும், 2வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.  ஈரானிடமிருந்து முற்றிலும் எண்ணெய் இறக்குமதியை நிறுத்த 6 மாதம் கெடு வழங்கப்பட்டுள்ளது.