Take a fresh look at your lifestyle.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க சிறுபான்மைக் கட்சிகள் ஓரணியில்: சி.வி.கே.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் சாதூரியமானதும் வரவேற்கத்தக்கதுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாணம், கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுக் காலை நடத்திய ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவின் செயற்பாடுகளால் நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. அரசமைப்பை மீறிய இந்தச் செயற்பாட்டுக்குப் பல தரப்பினர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஆகையால் நாட்டில் ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்கவேண்டுமென்றும் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் நாட்டில் நலனில் சிறுபான்மைக் கட்சிகளுக்கு அக்கறையில்லை என்ற பொதுவான கருத்து முன்வைக்கப்பட்டு வந்தாலும் அதிலிருந்து வேறுபட்டு நாட்டின் ஜனநாயகத்தையும் அந்த ஜனநாயகப் பண்பியல்புகளையும் காப்பாற்றுவதற்காக சிறுபான்மைக் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் வரவேற்கத்தக்கவை.

குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, நாடாளுமன்ற உறுப்பினர்களான் ரிஷாத் பதீயூதீன், ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமன்பதால் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.

இவ்வாறு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஏனைய கட்சிகளும் இணைந்துள்ளதால் எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகின்றபோது ஜனநாயகம் மீள நிலைநாட்டப்படக் கூடிய சூழ்நிலையே உள்ளது” என்றார்.