Take a fresh look at your lifestyle.

பாம்பன் தூக்கு பாலம் வழியே ரயில்கள் செல்ல தடை.!

தமிழ்நாடு ,இராமேஸ்வரம் : நேற்று திடீர் விரிசல் ஏற்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தை தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் ரவீந்திர பாபு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாம்பன் தூக்குபாலத்தின் நிலை இன்றளவும் திருப்தியளிக்கவில்லை என்றார். எனவே பாம்பன் தூக்கு பாலம் வழியே ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அனைத்து ரயில்களும் மண்டபத்திலிருந்து இயக்கப்படும் என்றார். திடீர் என ஏற்பட்ட விரிசல் முறையாக சரி செய்யப்பட்ட பின் மீண்டும் பாம்பன் தூக்கு பாலம் வழியே ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

முன்னதாக 146 தூண்கள் 270 அடி நீளம் கொண்ட பாம்பன் பாலத்தில் கடந்த 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்தப் பாலத்தின் இடையே கப்பல்கள் செல்லும் வகையில் ஷெர்ஷர் தூக்குபாலம் ஒன்று திறந்து மூடும் வகையில் உள்ளது. 104 ஆண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலம் கஜா புயலின்போது, தீவுப் பகுதியில் உள்ள படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் திறக்கப்பட்டது. அப்போது, தூக்கு பாலத்தைத் திறக்க உதவும் இரும்பு வடம் பழுதுபட்டு, உடனடியாக சரி செய்யப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து தொடர்ந்து நடந்துவந்தது.

இந்நிலையில், நேற்று தூக்குபாலத்தின் இரு பகுதிகளும் இணையும் இடத்தில் திடீர் என இடைவெளி ஏற்பட்டது. இதைக் கண்டறிந்த ரயில்வே ஊழியர்கள், இந்த இடைவெளியைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஏதுவாக, வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மாலை நேரத்தில் வரும் ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவுசெய்திருந்த பயணிகள் பாதிப்படைந்தனர். இதனிடையே தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் தூக்கு பாலத்தை இன்று ஆய்வு செய்து தற்போது ரயில்கள் செல்ல கூடிய நிலையில் தூக்கு பாலம் இல்லை. முழுவதுமாக சீர் செய்யப்பட்டால் தான் பாம்பன் பாலம் வழியே ரயில்களை இயக்க முடியும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>